புரெவி புயல் எச்சரிக்கையை அடுத்து கன்னியாகுமரியில் மீனவ கிராமங்களில் மெரைன் போலீஸார், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டு கடற்கரைக்கு யாரும் வரவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தனர்.
மேலும் தடையை மீறி கடலில் மீன்பிடிப்போர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் எனவும் குளச்சல் துறைமுக பகுதியில் போலீஸார் எச்சரித்தனர்.
குமரி வந்துள்ள இரு தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் கன்னியாகுமரி, குளச்சல் துறைமுக பகுதிகளில் முகாமிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மூன்று கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி முக்கடல் சங்கமத்தில் சுற்றி திரிந்தவர்களை அப்புறப்படுத்தினர். ஒலிபெருக்கி மூலம் புயல் குறித்து எச்செரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர். இதைப்போலவே 160 தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட தீயணைப்பு அதிகாரி சரவணபாபு தலைமையில் நாகர்கோவில் தீயணைப்பு அலுவலர் துரை, மற்றும் அலுவலர்கள் பேரிடர் பகுதியாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளில் கண்காணிப்பில்
ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே குமரியில் உள்ள 120 தீயணைப்பு வீரர்கள், சிறப்பு பயிற்சி பெற்ற நீச்சல், மற்றும் கமாண்டோ வீரர்களுடன் மதுரை, தேனி, விருதுநகரில் இருந்து தேனி மாவட்ட தீயணைப்பு அதிகாரி கவிதா, விருதுநகர் மாவட்ட உதவி தீயணைப்பு அதிகாரி முத்துபாண்டியன் தலைமையில் வந்த மேலும் 40 தீயணைப்பு வீரர்கள் மாவட்டம் முழுவதும் மீட்பு பணிக்கு ஆயத்தமாக உள்ளனர். இவற்றில் குமரியில் தாழ்வான பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுளள சுசீந்திரம், தெரிசனங்கோப்பு, காஞ்சாம்புறம், ஆற்றூர் ஆகிய இடங்ளில் மட்டும் 40 தீயணைப்பு வீரர்கள் முகாமிட்டுள்ளனர்.
மேலும் குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புயல் குறித்த அவசர கால மையம் 24 மணி நேரமும் அதிக பணியாளர்கள் கொண்டு செயல்பட்டு வருகிறது. 04652 231077 என்ற எண்ணில் பாதிப்புகள் குறித்து தெரிவிக்குமாறும், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு 100க்கும், தீயணைப்பு துறைக்கு 101க்கும் தகவல்களை தெரிவிக்க வலியுறுத்தப்பட்டுள்ளது. இது தவிர மாவட்டம் முழுவதும் வட்டாட்சியர்கள் தலைமையில் பேரிடர் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. புயலின் வீரியத்தை பொறுத்து தேவைப்பட்டால் கடற்கரை, மற்றும் மலையோரம், தாழ்வான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கும் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளை பொதுப்பணித்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
சுற்றுலா பயணிகளுக்கு தடை; படகு போக்குவரத்து ரத்து
புரெவி புயல் எச்சரிக்கையை தொடர்ந்து நேற்று மாலையில் இருந்தே கன்னியாகுமரி, மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து சுற்றுலா மையங்களிலும் சுற்றுலா பயணிகள் வருவதற்கு தடை விதிக்கப்பட்டது. கன்னியாகுமரி, மற்றும் நாகர்கோவிலில் உள்ள தங்கும் விடுதிகளில் வெளியூர்களில் இருந்து சுற்றுலா நோக்கத்தில் வந்து தங்கும் நபர்கள் குறித்த தகவல்களை தெரிவிக்குமாறும் வருவாய்த்துறையினர், விடுதி உரிமையாளர்களை வலியுறுத்தியுள்ளனர். கன்னியாகுமரியில் கடைகள், ஓட்டல்கள் அனைத்தையும் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இன்று கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது. விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை ஆகியவற்றிற்கான படகு போக்குவரத்து இன்று ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து 4ம் தேதி வரை படகு சேவை ரத்து செய்யப்படும் என கப்பல் போக்குவரத்து கழகத்தினர் தெரிவித்தனர்.