6 தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும், கடற்பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
''தென் வங்கக் கடல் பகுதியில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நேற்று இரவு புயலாக வலுவடைந்தது. இதற்குப் புரெவி என்று பெயரிட்ப்பட்டுள்ளது.
புரெவி புயல் பாம்பன் பாலத்துக்குக் கிழக்கே சுமார் 420 கி.மீ. தொலைவிலும் கன்னியாகுமரிக்குக் கிழக்கே சுமார் 600 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுவடைந்து இன்று இரவில் இலங்கையைக் கடக்கக் கூடும். நாளை காலை மன்னார் வளைகுடா வழியாக குமரிக்கடல் பகுதிக்கு நகரக் கூடும்.
மழைப் பொழிவு
இதன் காரணமாக ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய அதி கனமழையும் விழுப்புரம், கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும் பெய்யக்கூடும்.
செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும் இதர மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
நாளை தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.
சென்னை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அடுத்த 48 மணி நேரத்துக்கு நகரின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாக இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
தென்கிழக்கு வங்கக் கடல், குமரிக் கடல், மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வேகத்திலும் இடையிடையே 90 கி.மீ. வேகத்திலும் வீசுகிறது. இதனால் மீனவர்கள் அடுத்த 3 நாட்களுக்குப் பகுதிகளுக்குச் செல்லவேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்''.
இவ்வாறு புவியரசன் தெரிவித்துள்ளார்.