மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகையை உயர்த்தி வழங்க வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது.
தெலங்கானா, பாண்டிச்சேரி மாநிலங்களைப் போல் தமிழக அரசும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாத உதவித் தொகையை குறைந்தபட்சம் ரூ.3 ஆயிரமும், கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரமும் உயர்த்தி வழங்க வேண்டும்.
தனியார் துறை வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசு சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும்.
அரசுத் துறைகளில் பின்னடைவு காலிப் பணியிடங்களை கண்டறிந்து 3 மாதங்களில் 2013 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி வெளிப்படையாக அறிவித்து உடனடியாக நிரப்ப வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது.
சங்கத்தின் மாவட்ட துணைத்தலைவர் எஸ்.எம்.சக்கரையப்பன் தலைமை வகித்தார். ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட தலைவர் உமா சங்கர் மற்றும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் முழங்கினர்.
இதேபோல் விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட பொருளாளர் பி. புவிராஜ் தலைமையிலும், கழுகுமலை சார்பதிவாளர் அலுவலகம் முன்பு மாவட்ட துணைச் செயலாளர் எம்.சாலமன் ராஜ் தலைமையிலும் மறியல் போராட்டம் நடந்தது.