தமிழகம்

பிரதமர் வாய் திறக்க மறுப்பது ஏன்?- விவசாய விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறுக: பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

கரு.முத்து

பிரதமர் மோடி விவசாயிகளுக்கு விரோதமான புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற முன்வர வேண்டும் என்று தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

தமிழகக் காவிரி விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

தஞ்சாவூர் மாவட்டக் குழுவின் சார்பில் மாநிலத் தலைவர் த.புண்ணியமூர்த்தி தலைமையில் தஞ்சை ரயில் நிலையம் அருகில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தியும் கண்ணீர்ப்புகை குண்டு வீசியும் தாக்குதல் நடத்திய மத்திய அரசைக் கண்டித்து இதில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் திடீரெனச் சாலை மறியலில் ஈடுபட்டனர். தொடர்ந்து ரயில் நிலையத்தை முற்றுகையிடச் சென்ற விவசாயிகளைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் தஞ்சையில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பி.ஆர் பாண்டியன் தெரிவித்ததாவது:

"டெல்லியில் நீதி கேட்டுப் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய மத்திய அரசின் கோரமுகம் உலக அரங்கில் தலைகுனிவை ஏற்படுத்தி இருக்கிறது.

கனடா நாட்டின் பிரதமர், விவசாயிகள் போராட்டத்திற்குத் தானே முன்வந்து ஆதரவளித்த நிலையில் பிரதமர் மோடி வாய் திறக்க மறுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. போராடுகிற விவசாயிகளிடம் இரண்டுகட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை. கடும் குளிரிலும் உயிரைப் பணயம் வைத்து லட்சக்கணக்கானவர்கள் போராடுகிறபோது பிரதமர் மோடி வாய் திறக்காமல் மவுனம் காப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அவர் உடனடியாக விவசாயிகளை அழைத்துப் பேச வேண்டும். போராட்டத்தினுடைய நோக்கத்தை உணர்ந்து இந்தியா முழுமையிலும் விவசாயிகள் ஒன்றுபட்டு போராட்டக் களத்திற்கு வரும் நிலையில், தானே முன்வந்து மத்திய அரசாங்கம் வேளாண் விரோதச் சட்டங்களைக் கைவிட முன்வரவேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக ஒட்டுமொத்த விவசாயிகளை அழிக்க நினைக்கும் செயல் ஏற்கத்தக்கதல்ல.

இந்தச் சட்டத்திற்கு அதிமுக மாநிலங்களவையில் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்தது தமிழக விவசாயிகளை வெட்கித் தலைகுனிய வைத்திருக்கிறது.

பாரதிய ஜனதா கட்சியை ஆதரித்த கூட்டணிக் கட்சிகள் எல்லாம் இந்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து வெளியேறுகிற நிலையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இந்த சட்டத்தைத் திரும்பப்பெறப் பிரதமர் மோடிக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். இல்லையேல் தமிழக விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள்".

இவ்வாறு பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

இதில் தஞ்சை மண்டலத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டச் செயலாளர் மணி, தலைவர் பாஸ்கரன், இளைஞரணித் தலைவர் அறிவு, மாவட்டக் கவுரவத் தலைவர் திருப்பதி, மாவட்டத் துணைச் செயலாளர் பாச்சூர் விஜயகுமார் உள்ளிட்டோருடன் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்றனர்.

SCROLL FOR NEXT