மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்ந்திட, தமிழக அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருவதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
"மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் பேணிக் காத்திடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் நாள் 'அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்' அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாற்றுத்திறனாளிகள் சமூகத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும், சம வாய்ப்புகளையும் பெற்று தன்னம்பிக்கையுடன் உயர்ந்திட, தமிழக அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,500 மாதாந்திர உதவித்தொகை, கால்கள் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு பேருந்துப் பயணச் சலுகை; மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவீத இட ஒதுக்கீடு ஆகியவற்றை வழங்கி வருகிறது.
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்குக் குச்சிகள்; மூளை முடக்குவாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சக்கர நாற்காலிகள்; போக்குவரத்து நெரிசல்மிக்க இடங்களில் பார்வைக் குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினைக் கடப்பதற்கு ஏதுவாக குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது; மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை சிறப்புற அமைக்கும் வகையில் தக்க ஆலோசனைகளை வழங்குவற்கு இந்தியாவிலேயே முதன் முறையாக சென்னையில் மாநில ஆதார வள மையம் நிறுவியது போன்ற பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகளின் நல்வாழ்வுக்காகத் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
மாற்றுத்திறனாளிகள் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்திடவும், சமுதாயத்தில் சம உரிமையுடன் வாழ்ந்திடவும் தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் பல்வேறு நலத் திட்டங்களை மாற்றுத்திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு, மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்".
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.