கூழமந்தல் நட்சத்திர விநாயகர் கோயிலுக்கு விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் வழங்கியுள்ள அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கம் (கோப்பு படம்) 
தமிழகம்

டிச. 4-ல் கூழமந்தலில் நிறுவப்பட்டுள்ள ருத்ராட்ச லிங்கத்துக்கு குடமுழுக்கு விழா

செய்திப்பிரிவு

காஞ்சிபுரம்: கூழமந்தல் ஏரிக்கரையில் உள்ள நட்சத்திர விநாயகர் கோயிலில் நிறுவப்பட்டு வரும் பல முகங்களைக் கொண்ட பல ஆயிரம் ருத்ராட்சங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கத்துக்கு குடமுழுக்கு விழா வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

காஞ்சிபுரம் - வந்தவாசி நெடுஞ்சாலையில் உக்கம்பெரும்பாக்கம் கிராமத்துக்கு தெற்காக கூழமந்தல் ஏரிக்கரையில் 27 நட்சத்திர அதிதேவதைகளின் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அத்திமரத்தில் பல ஆயிரம் ருத்ராட்சங்களை கொண்டு வடிவமைக்கப்பட்ட அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கம் நிறுவப்பட்டுள்ளது. இந்த லிங்கம் மருத்துவ குணங்களும், தெய்வ அம்சமும் கொண்டது என நம்பப்படுகிறது.

இக்கோயிலில் அசுவனி முதல் ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களின் அதி தேவதைகளின் சிலைகளும் அவற்றுக்கு உரிய 27 விருட்சங்களும் அமைந்துள்ளன. மேலும் ராகு, கேது, சனீஸ்வரர் என தனித்தனி சந்நிதிகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கத்தை சங்கர மடத்தின் மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இக்கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியுள்ளார். இக்கோயிலில் இந்த லிங்கத்தை நிறுவுவதற்கான திருப்பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து அத்தி விருட்ச சஹஸ்ர ருத்ராட்ச லிங்கம் மற்றும் வள்ளி தேவசேனா சமேத சிவசுப்பிரமணியர் ஆகியோருக்கான மகா குடமுழுக்கு விழா வரும் 4-ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

SCROLL FOR NEXT