தமிழகம்

காந்தி பிறந்த நாளில் ரூ.1-க்கு டீ விற்பனை: குருவைப் பின்பற்றி சேவையை தொடரும் முதியவர்

செய்திப்பிரிவு

கிராமப்புறங்களில் கூட 7 ரூபாய்க்கு டீ விற்கும் இன்றைய நிலையில், தனது குருநாதாரைப் பின்பற்றி காந்தியடிகள் பிறந்த நாளில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்கிறார் கும்பகோணம் முதியவர் விஸ்வநாதன்.

கும்பகோணம் துக்காம்பாளையத் தெருவில் வசித்து வந்தவர் காந்தியவாதி கணபதி (83). நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், 50 ஆண்டுகளுக்கு முன்னர் கும்பகோணம் துக்காம்பாளைத் தெருவில் இருந்த டீ கடையில் பணியாளராக சேர்ந்தார்.

சில ஆண்டுகளில் கடை உரிமையாளர் காலமான பின்னர், அதே பகுதியில் சிறிய அளவில் சொந்தமாக டீ கடை வைத்த கணபதி, திருமணம் செய்து கொள்ளாமல் இறக்கும் வரை பிரம்மச்சாரியாகவே வாழ்ந்தார்.

தனது ஏழ்மை நிலையிலும், தள்ளாத வயதிலும் காந்திய கொள்கையைப் போற்றும் வகையில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தனது டீ கடையில் 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்து வந்தார்

தொடக்கத்தில், மற்ற கடைகளில் 2 ரூபாய்க்கு டீ விற்பனை செய்தபோது, இவர், காந்தி பிறந்த நாளன்று இலவசமாகவே டீ வழங்கி வந்தார். கால ஓட்டத்தில் விலைவாசி உயர்வினால், இலவசமாக வழங்க இயலாமல் போனதால், சலுகை விலையாக ரூ.1-க்கு டீ விற்பனை செய்தார்.

இந்நிலையில், கணபதி கடந்த ஆண்டு மரணமடைந்தார்.

கணபதியின் சேவை குறித்து கடந்த ஆண்டு ‘தி இந்து’ வில் சிறப்புச் செய்தி வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கணபதியின் வாரிசாக அதே கடையை நடத்தி வரும் பெரியவர் விஸ்வநாதன், தனது குருவின் கொள்கைகளைப் போற்றும் வகையில், அவரைப் போலவே காந்தி பிறந்த நாளான நேற்று காலை முதல் இரவு வரை 1 ரூபாய்க்கு டீ விற்பனை செய்தார். மக்கள் திரளாக வந்திருந்து டீ அருந்திச் சென்றனர்.

தனது காலம் உள்ள வரை, காந்தி பிறந்த நாளன்று இப்பணியை தொடர்வேன் என்கிறார் விஸ்வநாதன்.

SCROLL FOR NEXT