விளைநிலங்களின் பாசன வசதிக்காக கோலாரம் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் ஒன்றிணைந்து பரமத்தி அருகே பிரம்மாண்டமான கிணறு வெட்டியிருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பரமத்தி அருகே கோலாரம், மணியனூர், செருக்கலை, ராமதேவம், நல்லூர் உள்ளிட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிணறு மற்றும் பருவமழையுமே மேற்குறிப்பிட்ட பகுதியில் உள்ள விளைநிலங்களுக்கான பாசன ஆதாரம்.
இந்நிலையில் பருவ நிலை மாற்றம் காரணமாக போதிய மழை இல்லாததால் நிலத்தடி நீர் அதள பாதாளத்திற்கு சென்றுவிட்டது. விவசாயம் கேள்விக்குறியாகும் சூழல் உள்ளது. பலர் விவசாயத்தை கைவிட்டு மாற்றுத் தொழிலை நாடிச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
இந்நிலையில், தண்ணீர் பிரச்சினைக்கு தீர்வு காண கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து 15 கி.மீ., தொலைவில் உள்ள மொளசி என்ற கிராமத்தில் கிணறு வெட்டி, அங்கிருந்து குழாய் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் எடுத்துவர திட்டமிட்டு பணியை தொடங்கியுள்ளனர்.
இதுதொடர்பாக கோலாரம் கிராமத்தைச் சேர்ந்த நீரேற்றுப் பாசன விவசாயிகள் கூறியதாவது:
இந்தப் பகுதியில் மழை இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் அதள பாதாளத்துக்கு சென்றுவிட்டது. ஏறத்தாழ 1,200 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணறு அமைத்தாலும் தண்ணீர் இல்லை. இதனால் விவசாயம் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கு தீர்வு காணும் வகையில் மொளசியில் தனியார் இடத்தை விலைக்கு வாங்கி கிணறு வெட்டப்படுகிறது. 100 அடி நீளம், 40 அடி அகலம் மற்றும் 50 அடி ஆழம் கொண்ட கிணறு வெட்டப்படுகிறது.
இதற்காக ஏற்படுத்தப்பட்ட நீரேற்று பாசன விவசாயிகள் சங்கத்தில் 585 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். அவர்களிடம் நிதி திரட்டி இப்பணி மேற்கொள்ளப்படுகிறது. இதன்மூலம் 385 ஏக்கர் விளை நிலம் பாசன வசதி பெறும். விவசாயத்திற்கு மட்டுமின்றி குடிநீரும் இதன்மூலம் விநியோகம் செய்யப்படுகிறது. காவிரி ஆற்றில் இருந்து 500 மீட்டருக்கு அப்பால் இந்த கிணறு அமைந்துள்ளது.
இதனால் கிணற்றில் ஊற்றும் குறைந்த ஆழத்தில் கிடைத்துவிட்டது. கிணறு வெட்டி குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல மாவட்ட நிர்வாகத்திடம் உரிய அனுமதியும் பெறப்பட்டுள்ளது. ஓரிரு மாதங்களில் இப்பணி நிறைவு செய்யப்படும், என்றனர்.