கிருஷ்ணகிரி அருகே நாட்டாண்மைக்கொட்டாய் கிராமத்தில் உள்ள மல்லிகை தோட்ட மொன்றில் குறைந்த அளவே பூக்கள் பூத்துள்ளன. படம்: எஸ்.கே.ரமேஷ் 
தமிழகம்

காவேரிப்பட்டணம் பகுதியில் பனிப்பொழிவால் மல்லிகை பூக்கள் விளைச்சல் 90 சதவீதம் பாதிப்பு

செய்திப்பிரிவு

காவேரிப்பட்டணம் பகுதியில் நிலவும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகைப் பூக்கள் விளைச்சல் 90 சதவீதம் பாதிக்கப்பட்டுள்ளது என விவசாயிகள் தெரிவித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப் பட்டணம், அவதானப்பட்டி, நாட்டாண்மை கொட்டாய், மலையாண்டஅள்ளி, வேலம் பட்டி, போச்சம்பள்ளி, மத்தூர் பகுதிகளில் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மல்லிகை சாகுபடி மேற் கொள்ளப்பட்டுள்ளது. இங்கு விளையும் மல்லிகைப் பூக்கள், சரக்கு வாகனங்களில் பெங்களூரு சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு ஏலம் முறையில் மலர் விற்பனை நடக்கிறது. தற்போது, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடும் பனிப் பொழிவால் மல்லிகைப் பூ விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மல்லிகை விவசாயி ராமலிங்கம் கூறும் போது, ‘‘மார்ச், ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் மல்லிகைப் பூக்கள் விளைச்சல் அதிகரித்து காணப் படும். நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் விளைச்சல் குறைவாக இருக்கும். இந்நிலையில் தற்போது கடும் பனி பொழிவால் மல்லிகை விளைச்சல் வழக்கத்தைவிட குறைந் துள்ளது. பெங்களூரு சந்தையில் இன்று (நேற்று) மல்லிகையை கிலோரூ.1200-க்கு கொள் முதல் செய்தனர். இனிவரும் நாட்களில் பூக்கள் விலை படிப்படியாக குறைந்துவிடும்.

பெங்களூரு சந்தையைப் பொறுத்தவரை நேரத்துக்கு தகுந்தவாறு ஏலத்தில் விலை கிடைக்கும். இதனால் அதிகாலையில் கடும் பனிப்பொழிவை மிகுந்த சிரமத்துடன் எதிர் கொண்டு பூக்களைப் பறித்து விற்பனைக்கு அனுப்பி வருகிறோம்.

பனிப் பொழிவால் செடிகளில் பூக்கள் வரத்தும் 90 சதவீதம் குறைந்துவிட்டது. செடிகளில் பூச்சித் தாக்குதல், பூக்கள் கருகுதல் உள்ளிட்டவை பனிக் காலங் களில் அதிகளவில் இருக்கும் என்பதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது,’’ என்றார்.

SCROLL FOR NEXT