‘புரெவி’ புயலை எதிர்கொள்ள குமரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பேரிடர்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர் மா.அரவிந்த் நேற்று கூறியதாவது:
மாவட்டம் முழுவதும் துணை ஆட்சியர் தலைமையில் 8 மண்டல அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பேரிடரினால் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக 76 இடங்களும், அதிக பேரிடர்ஏற்படும் பகுதிகளாக 34 இடங்களும் கண்டறியப்பட்டு, ஒவ்வொருஇடத்துக்கும் தலா 10 முன்கள பொறுப்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு போதிய பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக முகாம்கள்
பெருவெள்ளத்தால் ஆபத்துக்குள்ளாகும் தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களை பாதுகாப்பாக அப்புறப்படுத்தி தங்க வைப்பதற்கு 75 தற்காலிக முகாம்கள் தயார்நிலையில் உள்ளன. தற்காலிக முகாம்களில் சமுதாய சமையலறை அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சேதங்களை சீரமைக்க ஜேசிபி, மின் மரஅறுவை இயந்திரங்கள், ஜெனரேட்டர் ஆகியவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி,சிற்றாறு 1, சிற்றாறு 2 அணைகள் பாதுகாப்பான நிலையில் முழு கண்காணிப்பில் உள்ளன.
உடனுக்குடன் எச்சரிக்கை
புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் டிசம்பர் 2-ம் தேதி வரை மீனவர்கள் கடலுக்குசெல்லவேண்டாம் என அறிவுறுத் தப்பட்டிருந்தது. மேலும்,கடந்த 30-ம் தேதிக்குள் அனைத்து ஆழ்கடல் மீன்பிடி படகுகளும் அருகிலுள்ள துறைமுகங்களுக்கு திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.
வானிலை எச்சரிக்கை அனைத்து மீனவ கிராமங்களுக் கும், மீனவர் கூட்டுறவு சங்கங்கள், மீனவர் சங்கங்கள், தேவாலயம் மூலம் தொடர்ந்து தெரிவிக்கப்படுகின்றன. வாட்ஸ்அப் குழுக்கள் மூலமாகவும் வானிலை தகவல்கள் பரப்பப்படுகின்றன. செயற்கைகோள் தொலைபேசி மூலம் ஆழ்கடலுக்கு சென்றுள்ள மீன்பிடிபடகுகளை தொடர்பு கொள்ள நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்றுதிரும்பி வராத 161 விசைப்படகு களுக்கு மீன்வளத்துறை வாயிலாகவும், கடலோர கப்பல்படை வாயிலாகவும் தகவல் தெரிவிக்கப்பட் டுள்ளது என, ஆட்சியர் அரவிந்த் தெரிவித்தார்.
தேசிய பேரிடர் மீட்பு படைகள்
புயல் எச்சரிக்கையைத் தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்தில் பேரிடரை எதிர்கொள்ளும் வகையில் 3 தேசிய பேரிடர் மீட்பு படைகள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன. ஒவ்வொரு குழுவிலும் 20 வீரர்கள் உள்ளனர். இதில் ஒரு குழுவினர் நேற்று அரக் கோணத்தில் இருந்து நாகர்கோவில் வந்தனர். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் அவர்கள் முகாமிட்டுள்ளனர். மேலும் இரு தேசிய பேரிடர் மீட்பு படையினர் குமரி வருகின்றனர். மொத்தம் இரு குழுவினர் நாகர்கோவிலிலும், ஒரு குழுவினர் குளச்சல் புனித மேரி மேல்நிலைப் பள்ளியிலும் தங்கி பேரிடர் மீட்பு பணியில் ஈடுபடுவர்.