திருவண்ணாமலை அருகே சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் தொடர் மழையால் அழுகி சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட் டத்தில் வட கிழக்கு பருவ மழை மற்றும் ‘நிவர்’ புயலுக்கு நெல், மணிலா, வாழை மற்றும் கரும்பு உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதேபோல், திருவண்ணாமலை அருகே ஆடையூர், புனல்காடு, கலர் கொட்டாய் மற்றும் பெரியகுளம் கிராமங்களில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயமும் அழுகியதால் விவசாயிகள் வேதனை அடைந் துள்ளனர்.
வருவாய் இழப்பு
இதுகுறித்து விவசாயிகள் கூறும் போது, “திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த ஒரு மாதமாக பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ‘நிவர்’ புயல் காரணமாக பெய்த தொடர் மழையால் விவசாய நிலங்களில் மழை நீர் தேங்கியது. இதனால், எங்கள் கிராமங்களில், சுமார் 50 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சின்ன வெங்காயம் அழுகியது. ஓர் ஏக்கருக்கு சுமார் ரூ.30 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. அறுவடை செய்ய இருந்த நிலையில் மழைக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முழுமையான மகசூலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. செலவு செய்த தொகை கூட கிடைக்க வாய்ப்பில்லை. ஒவ் வொரு விவசாயிக்கும் பல லட்ச ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
வங்கியில் கடன் பெற்றுதான் நடவு செய்துள்ளோம். இந்த சூழ்நிலையில் சின்ன வெங்காயம் அழுகி போனதால், என்ன செய்வது என தெரியவில்லை. அடுத்ததாக நடவு செய்வதற்கும் பணம் இல்லை. மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழக அரசு உரிய நட வடிக்கை மேற்கொண்டு இழப் பீட்டுத் தொகையை வழங்க வேண் டும்” என்றனர்.