ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயலால் ரூ.3.10 கோடிஅளவுக்கு சேதங்கள் ஏற்பட்டுள் ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேத விவரங்கள் தொடர்பாக கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. புயலுக்கு பிந்தைய நடவடிக்கை யின் ஒரு பகுதியாக துல்லியான சேத விவரங்களை கணக்கிட ராணிப்பேட்டை மாவட்டத்தில் ‘கைசாலா’ எனப்படும் செல்போன் செயலி வழியாக பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்மூலம் ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்தம் 5 ஆயிரத்து 734 ஏக்கரில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதில், 4,546 ஏக்கரில் நெற் பயிர், 125 ஏக்கரில் நிலக்கடலை, 712 ஏக்கரில் வாழை ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளன. மொத்தம் 5,327 விவசாயிகளுக்கு ரூ.2 கோடியே 7 லட்சத்து 96 ஆயிரத்து 497 மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்துள்ளன.
மாவட்டத்தில் வீடுகள் சேத மதிப்பு ரூ.12 லட்சத்து 98 ஆயிரத்து 300 எனவும், கால்நடை உயிரிழப்பு மதிப்பு ரூ.2 லட்சத்து 15 ஆயிரம் எனவும், வாத்துகளின் உயிரிழப்பு மதிப்பு ரூ.31 ஆயிரத்து 500 எனவும் கணக்கிடப்பட்டுள்ளன. மின்துறை சேத மதிப்பீடாக 182 மின்கம்பங்கள், 11 டிரான்ஸ்பார்மர்கள் என ரூ.87 லட்சத்து 23 ஆயிரத்து 564 அளவுக்குசேதமடைந்துள்ளன. மாவட்டம் முழுவதும் ‘நிவர்’ புயல் பாதிப்பால் ரூ.3.10 கோடி அளவுக்கு சேதங் கள் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப் பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் மொத்தமுள்ள 557 ஏரிகளில் 78 ஏரிகள் முழுமையாக நிரம்பி யுள்ளன. 75 சதவீதம் அளவுக்கு 66 ஏரிகள் நிரம்பியுள்ளன. 1,377 குளங்கள், ஊரணிகளில் 123 முழுமையாக நிரம்பியுள்ளன. 197-ல் சுமார் 75 சதவீதம் அளவுக்கு நிரம்பியுள்ளன.
இந்நிலையில், வேகமாக நிரம்பி வரும் காவேரிப்பாக்கம் ஏரியை மாவட்ட ஆட்சியர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் நேற்று ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, நெமிலி வட்டம் சித்தஞ்சி கிராமத்திலும், ஆற்காடு வட்டம் புதுப்பாடி கிராமத்தில் நிவர் புயலால் சேதமடைந்த நெற் பயிர்களையும், மேல்விஷாரம் நந்தியாலம் கிராமத்தில் வாழை பயிர் சேதங்களையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். அப்போது, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) விஸ்வநாதன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் சந்திரன், வட்டாட்சியர்கள் காமாட்சி (ஆற் காடு), பாக்கியநாதன் (வாலாஜா) உள்ளிட்டோர் உடனிருந்தனர்.