தமிழகம்

கனமழை எச்சரிக்கையால் முன்னேற்பாடுகள்: தென்காசி மாவட்டத்தில் 364 முதல்நிலை அலுவலர்கள் நியமனம்- ஆட்சியர் சமீரன் தகவல்

த.அசோக் குமார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி புயலாக மாறும் என்றும், இதனால் தென் தமிழகத்தில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையொட்டி, தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரன், தென்காசி மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனு ஜார்ஜ் ஆகியோர் கனமழையால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் ஆய்வு செய்தனர். தென்காசி, குற்றாலம், செங்கோட்டை, கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வுப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, செய்தியாளர்க்ளிடம் ஆட்சியர் சமீரன் கூறியதாவது:

தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் முன்னேற்பாடுகள் செய்வது குறித்து தமிழக தலைமைச் செயலாளரும், தமிழக முதல்வரும் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தி, அறிவுரைகளை வழங்கியுள்ளனர். அதன்படி, தென்காசி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தென்காசி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகள், கடந்த காலங்களில் கன மழையின்போது வெள்ளம் ஏற்பட்ட பகுதிகள் என 34 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் உள்ள மக்களுக்கு வானிலை ஆய்வு மைய தகவல் குறித்து தெரிவிக்கப்பட்டு, பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதி கனமழை பெய்தால் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும், எந்தெந்த பகுதிகளில் மக்களை தங்க வைக்க முகாம்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று ஆய்வு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும்.

முகாம்களில் தேவையான வசதிகளுடன் சுத்தமான முறையில் பராமரிக்கப்படும். மேலும், அனைத்துத் துறையினரை உள்ளடக்கிய மண்டல அளவிலான 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்களை உள்ளடக்கிய 364 முதல்நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைத்து பேரிடர் மேலாண்மை பணிகள் செய்யப்படும்.

தென்காசி மாவட்டத்தில் 446 குளங்கள், 5 நீர்த்தேக்கங்கள் உள்ளன. குளங்களின் கரை பலமாக உள்ளதா ஆய்வு செய்து, பலவீனமாக உள்ள கரைகளை மண் மூட்டைகளைக் கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு ஆட்சியர் கூறினார்.

SCROLL FOR NEXT