தென்மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், விருதுநகர் மாவட்டம் மீட்பு, நிவாரணப் பணிகளுக்குத் தயாராக உள்ளதாக ஆட்சியர் இரா.கண்ணன் தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
அது, இன்று புயலாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நாளை மாலை இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் தென் மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் விவரித்தார்.
அவர் கூறியதாவது:
வெள்ளம் பாதிக்கும் என எதிர்பார்க்கும் பகுதிகளுக்கு அதிகாரிகள் ஆய்வுக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக கிழக்குப் பகுதியில் மழை அதிகமாக இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டுள்ளது. ஆகையால், சம்பந்தப்பட்ட விஏஓ.,க்களுடன் இணைந்து தேவை ஏற்பட்ட உடனேயே நிவாரண முகாம்களைத் தொடங்கி மக்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 9 இடங்கள் மட்டுமே வெள்ளம் பாதிக்க வாய்ப்புள்ள இடமாகக் கண்டறியப்பட்டுள்ளன.
விருதுநகரைப் பொறுத்தவரை இப்போதைக்கு 30 முதல் 35% கண்மாய்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. ஆகையால், இங்கு எவ்வளவு மழை பெய்தாலும் அது வரமே. எனவே, மழை நீர் வீணாகாமல் சேமிக்க அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், மாவட்டத்தில் உள்ள 9 அணைகளின் 3 அணைகளில் மட்டுமே தண்ணீர் உள்ளது. அதுவும் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. ஆகையால், கனமழை பெய்தாலும் வெள்ளம் ஏற்படாத வகையில் நீர்நிலைகள் நிரம்பும். வரும் கோடையைச் சமாளிக்க இந்த நீர் ஆதாரம் பயன்படும்.
மாவட்ட மீட்புக் குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. 50 நீச்சல் வீரர்களுடன் அருப்புக்கோட்டை, சிவகாசி, ராஜபாளையத்தில் மீட்புக் குழு தயாராக உள்ளது. படகுகள் போன்ற உபகரணங்களும் தயாராக உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.