கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் இடம்பெற்றுள்ளதா என்பதைக் கட்சித் தலைமைதான் முடிவு செய்யும். இம்மாத இறுதியில் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா வரவுள்ளார் என்று, புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தோல்வியடைந்தது. அதையடுத்து, எதிர்க்கட்சித் தலைவராக ரங்கசாமி உள்ளார். சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள சூழலில், "அதிமுக -பாஜக கூட்டணியில் நீடிக்கிறோம். இந்தக் கூட்டணி தொடரும்" என ரங்கசாமி அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், புதுச்சேரி பாஜக மாநிலத் தலைவர் சாமிநாதன் இன்று (டிச. 01) செய்தியாளர்களிடம் கூறியதாவது:
" 'மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே ஆட்சி' என்ற கோஷத்துடன் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டோம். கட்சியின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா இம்மாத இறுதியில் புதுச்சேரி வரவுள்ளார்.
தமிழகம், புதுச்சேரியில் பாஜக-அதிமுக கூட்டணி முடிவாகியுள்ளது. அதில், புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் இடம் பெற்றுள்ளதா என்பதை தேசியத் தலைமைதான் முடிவு செய்யும். கூட்டணி தொடர்பான இறுதி முடிவை கட்சித் தலைமைதான் எடுக்கும்.
நான்கரை ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சியில் அதிக போராட்டங்கள் புதுச்சேரியில் நடந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்ட அனைவருக்கும் ஆதரவாக காங்கிரஸ் ஆட்சியைக் கண்டித்து வரும் 4ஆம் தேதி முதல் 6ஆம் தேதி வரை 72 மணி நேரத் தொடர் போராட்டம் நடத்த உள்ளோம். அதையடுத்து, ஊழல் அரசை வீழ்த்துவோம் என்ற கோஷத்துடன் மாநிலம் தழுவிய பேரணி நடத்த உள்ளோம்".
இவ்வாறு சாமிநாதன் தெரிவித்தார்.