பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி அறிக்கைக்கு நேரம் ஒதுக்கக்கோரி பிறப்பிக்கப்பட்டுள்ள அரசாணையை ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
உயர் நீதிமன்றக் கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வில் மதுரை வழக்கறிஞர் ஏ.கண்ணன், காணொலி வழியாக ஆஜராகி கூறியதாவது:
பிரசார் பாரதியின் கீழ் இயங்கும் பொதிகை உள்ளிட்ட அனைத்து தொலைக்காட்சிகளும் தினமும் 15 நிமிடங்கள் சமஸ்கிருத செய்திக்கு ஒதுக்க வேண்டும் என்றும், ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை 15 நிமிடங்கள் சமஸ்கிருத வாராந்திர செய்தி தொகுப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்மொழி நிகழ்ச்சிகளுக்காகத் தொடங்கப்பட்ட பொதிகை டிவியில் இதுவரை வேறு மொழி செய்திகள் எதுவும் இடம்பெறவில்லை. அப்படியிருக்கும் போது தமிழர்களின் பன்பாட்டு வாழ்விற்கு எந்தவிதத்திலும் தொடர்பில்லாத சமஸ்கிருத செய்தி அறிக்க வாசிப்பதை ஏற்க முடியாது.
எனவே சமஸ்கிருத செய்தி அறிக்கை, சமஸ்கிருத வாராந்திர செய்தித் தொகுப்பு குறித்த ஆணையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றார்.
இது தொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.