சூலூர் அருகே செலக்கரிச்சல் கிராம கருவேலங்குட்டைக்கு வரும் நீர்வழிப் பாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு மேல் வறண்டு கிடக்கும் இந்தக் குட்டை காப்பாற்றப்படுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இதுகுறித்து செலக்கரிச்சல் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அ.திருநாவுக்கரசு கூறியதாவது:
''கோவை மாவட்டம் சூலூர் அருகேயுள்ள செலக்கரிச்சல் கிராமத்தில் கருவேலங்குட்டை அமைந்துள்ளது. 36 ஏக்கர் பரப்பளவுள்ள இக்குட்டையானது வானம் பார்த்த பூமியாக, 30 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டுக் கிடக்கிறது.
குட்டையில் தண்ணீர் தேங்கியிருந்த காலகட்டத்தில் லட்சமி நாயக்கன்பாளையம், செலக்கரிச்சல், அப்பநாயக்கன்பாளையம், கரடிவாவி, மல்லைக் கவுண்டனூர், புளியமரத்துப் பாளையம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த 5 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றன. அங்கு மக்காச்சோளம், தக்காளி, கத்தரிக்காய், பீட்ரூட் போன்ற காய்கறிகள், சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டன. தென்னந்தோப்புகளும் உள்ளன. இக்குட்டை நீராதாரமற்றுப் போன நிலையில், விவசாய நிலங்கள் பாசன வசதியை இழந்தன.
லட்சுமி நாயக்கன்பாளையத்தில் இருந்து செலக்கரிச்சல், புளியமரத்துப் பாளையம் உள்ளிட்ட கிராமங்கள் வழியாகக் கருவேலங்குட்டைக்கு நீர்வழிப்பாதைகள் உள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்யும் மழை நீரானது, நீர் வழிப்பாதைகள் வழியாக வழிந்தோடிக் குட்டையை அடையும்.
அதைத் தடுக்கும் வகையில், தற்போது நீர் வழிப்பாதைகளின் குறுக்கே ஆங்காங்கே வழித்தடங்கள் அமைக்கப்பட்டு, ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால் குட்டைக்கான நீர்ப் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டால் மழைக்காலங்களில் கொஞ்சமாவது மழை வெள்ளம் வந்தடைய வாய்ப்புள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகத்தினர் ஆக்கிரமிப்பு வழித்தடங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்''.
இவ்வாறு சமூக ஆர்வலர் திருநாவுக்கரசு கூறினார்.