வங்கக்கடலில் உருவாகவுள்ள புதிய புயலால் கன்னியாகுமரிக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டதாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
மேலும், மூன்றாண்டுகளுக்கு முன் ஒக்கி எதிர்பாராதவண்ணம் தாக்கியது, ஆனால் இப்போது முன்னறிவிப்புகள் உள்ளதால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று அவர் தெரிவித்தார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நேற்று காலை தாழ்வு மண்டலமாக மாறி தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதியில் காரைக்காலுக்கு தென்கிழக்கே ஏறக்குறைய 975 கி.மீ தூரத்தில் நிலை கொண்டிருந்தது.
அது, இன்று புயலாக வலுப்பெற்று மேற்கு, வடமேற்கு திசையில் நாளை மாலை இலங்கையைக் கடந்து குமரி கடல் பகுதிக்கு நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதனையொட்டி மாவட்ட ஆட்சியர் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வங்கக்கடலில் உருவான காற்றமுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளது. இதனால், கன்னியாகுமரிக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டிசம்பர் 3-ம் தேதி அதிகனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால், ஏற்கெனவே கடலுக்குச் சென்ற மீனவர்களை பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு எச்சரித்துள்ளோம். கடலோர காவற்படை மூலமும் மீனவ சங்கப் பிரதிநிதிகள் மூலமாகவும் எச்சரித்துள்ளோம். எங்களுக்குக் கிடைத்தத் தகவலின்படி 161 படகுகளில் மீனவர்கல் சென்றுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலானோர் அரபிக்கடல் பகுதியில்தான் மீன்பிடித்துக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரைஉம் கேரளா, கர்நாடகா, குஜராத் கடற்கரையில் இறங்க அறிவுறுத்தியுள்ளோம். கடந்த முறை ஒக்கி தாக்கியதை யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இந்த முறை 5 நாட்களாகவே தொடர்ந்து அரசு எச்சரிக்கைகளை விடுத்துவருகிறது. ஆகையால், அரசாங்கத்தை குறைகூற முடியாது. படகு உரிமையாளர்கள் தான், மீனவர்களை உடனே கரை திரும்ப தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்.
மாவட்டத்தில் அணைகளைப் பொறுத்தவரை இன்னும் எதுவும் முழு கொள்ளளவை எட்டவில்லை. அணைகளில் இருந்து தொடர்ந்து தண்ணீர் வெளியேற்றப்பட்டுவருவதால் ஒரே நேரத்தில் பெருமளவு வெளியேற்றி வெள்ள அபாயம் ஏற்பட வாய்ப்பில்லை.
மாவட்டத்தில் மொத்தம் 35 இடங்கள் வெள்ள பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ள இடங்களாகக் கண்டறியப்பட்டுள்ளன. அங்கெல்லாம் அதிகாரிகள் ஆய்வில் உள்ளனர். 75 இடங்களில் முகாம்கள் அமைக்க ஏற்பாடு நடந்துவருகிறது. தங்குமிடங்களீல் குடிதண்ணீர், ஜென்செட், கழிவறை உள்ளிட்ட வசதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
இதுதவிர அரக்கோணத்திலிருந்து 3 பேரிடர் மீட்புக் குழுக்கள் வருகின்றன. ஏற்கெனவே 19 பேர் கொண்ட ஒரு குழு நாகர்கோவில் வந்துவிட்டது. இன்னும் தலா 19 பேர் கொண்ட இரு குழுக்கள் நாளை காலை வந்தடையும். அவற்றில் ஒன்று நாகர்கோவிலிலும் மற்றொன்று குளச்சல் துறைமுகத்திலும் நிலை நிறுத்தப்படும்.
அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருப்பதோடு அத்தியாவசிய உணவுப் பொருட்களை இருப்பு வைத்துக் கொள்ளுமாறு வேண்டுகிறோம்.