வயலின் வாசிப்பில் தனது தனிப்பட்ட திறமையால் கர்னாடக இசை உலகில் ராஜபாட்டை அமைத்தவர் டி.என்.கிருஷ்ணன் அண்ணா. கர்னாடக இசை உலகில் பெருவாழ்வு வாழ்ந்த அவர், கடந்த நவ.2-ம் தேதி தனது 92-வது வயதில் காலமானார். 1950, 60-களின் தொடக்கத்தில் நான் பள்ளியில் படித்த காலத்தில் இருந்தே, இசைத் துறையில் அவரது அன்பான வழிகாட்டுதல் எனக்கு கிடைத்தது.
ஆலப்புழாவில் இருக்கும் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் என்னை பாடவைத்து மகிழ்வார். நான்பாடுவேன். பிரபல வித்வான் மருங்காபுரி கோபாலகிருஷ்ண ஐயர் என் பாட்டிக்கு கொடுத்திருந்த வயலினை டிஎன்கே வாசிப்பார்.
அரியக்குடி பாணியில்தான் நான் இசைப் பயிற்சி பெற வேண்டும் என்று என் தந்தை ஆலப்புழா பார்த்தசாரதி விரும்பினார். அதனால் அவரிடம் பயிலும் பாக்கியம் எனக்கு கிடைத்தது. அதன் காரணமாகவே, எனக்கும் பக்கவாத்தியமாக டிஎன்கே அண்ணா வயலின் வாசிக்கும் பாக்கியமும் கிடைத்தது. 1972-ல்என் முதல் கச்சேரி நடந்ததும் அவரோடுதான். அப்போதுநான் கல்லூரி மாணவன். மெட்ராஸ் கர்னாடக இசை ரசிகர்களுக்கு என்னை டிஎன்கே அண்ணாதான் வாஞ்சையோடு அறிமுகப்படுத்தினார்.
எனது குருவான அரியக்குடி ராமானுஜ அய்யங்கார்,ராக ஆலாபனைகளில் தான் காட்டும் ஏற்ற இறக்கங்களை வயலின் கலைஞரும் தொடரவேண்டும் என்றுநினைப்பவர். அவரது எண்ணத்தை அட்சரம் பிசகாமல் அப்படியே பூர்த்தி செய்வார் டிஎன்கே. அதனால், அரியக்குடி ராமானுஜ அய்யங்காருக்கு மிகவும் பிடித்தமான பக்கவாத்தியக் கலைஞராக இருந்தார்.
மத்யம காலத்தில் பாடும் அரியக்குடி, மின்னல்வேகத்தில் துரித காலத்தில் பாடும் ஜி.என்.பாலசுப்ரமணியம், ஆர்ப்பாட்டமின்றி அமைதியாக மந்தர ஸ்தாயியில் பாடும் எம்.டி.ராமநாதன், சர்வலகுவில் பாடும் செம்மங்குடி, மதுரை மணி ஐயர், புல்லாங்குழல் மேதை மாலி என பல கலைஞர்களுக்கும் ஏற்ப தனது வயலின் இசையை வழங்கினார் டிஎன்கே. அதனாலேயே வயலின் மூவரில் (டி.என்.கிருஷ்ணன், லால்குடி ஜெயராமன், எம்.எஸ்.கோபாலகிருஷ்ணன்) ஒருவராக போற்றப்பட்டார்.
மனோதர்மத்துடன் கூடிய டிஎன்கேவின் வாசிப்பு, நேரில் பேசுவதுபோலவே இருக்கும். தோடி, யதுகுலகாம்போஜி, சஹானா, கரஹரப்ரியா, சுருட்டி, சிந்துபைரவி என எந்த ராகமானாலும், அதன் பரிபூரண சொரூபத்தை ரசிகர்கள் முன்பு தரிசனப்படுத்தும் திறமை அவருக்கு இருந்தது. 10 வயதில் வயலின் வாசிக்கத் தொடங்கியது முதல், டி.என்.கிருஷ்ணனின் வில்லில் இருந்து கடந்த 80 ஆண்டுகளாக இந்த பூவுலகில் ஒலித்துக்கொண்டிருந்த கானம், இனி இறைவன் சந்நிதானத்தில் கேட்கும்!
கட்டுரையாளர்: பிரபல கர்னாடக இசைக் கலைஞர்.