வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி நடக்கவுள்ள தொடர் போராட்டம், சென்னையில் இன்று தொடங்குகிறது.
இதுதொடர்பாக கட்சியினருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் நேற்று எழுதியுள்ள கடிதம்:
தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முதல்கட்ட போராட்டம் சென்னையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் முன்பு டிச.1-ம் தேதி (இன்று) காலை 11 மணிக்கு தொடங்குகிறது. அடுத்தகட்டமாக கிராம நிர்வாக அலுவலகம் முன்பு மக்கள்திரள் போராட்டம், அதைத் தொடர்ந்து ஊராட்சி ஒன்றியம், மாவட்டம் என பல நிலைகளில் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்த இருக்கிறோம். இவற்றுக்கெல்லாம் மகுடம் சூட்டும் வகையில் மாபெரும் நிறைவுகட்ட போராட்டம் அடுத்த சில வாரங்களில் நடக்கவுள்ளது.
இப்போது என்ன கோரிக்கையை முன்வைத்து போராடுகிறோமோ, அதே கோரிக்கையை முன்வைத்து 1987-ம் ஆண்டு நாம் நடத்திய ஒரு வார தொடர் சாலைமறியல் போராட்டம் உலகஅளவில் கவனம் ஈர்த்தது. அதற்காக நாம் மேற்கொண்ட முன்னேற்பாடுகள் ஏராளமானவை. இப்போது ஒரு சில வாரங்களிலேயே அதைவிட கூடுதலான எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறோம். அதற்கு காரணம் நாம் முன்வைத்துள்ள கோரிக்கையில் உள்ள நியாயம்தான்.
சென்னையில் வரும் 4-ம் தேதி வரை நடக்கவுள்ள போராட்டத்தில் லட்சக்கணக்கில் பாட்டாளிகள் பங்கேற்க வேண்டும். நமது உரிமைக்காகவே போராடுகிறோம். எனவே, எதற்காகவும் அஞ்சாமல் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும். அதேநேரத்தில் நமதுகோரிக்கைகளுக்கும், உன்னத நோக்கங்களுக்கும் ஊறு விளைவிக்கக்கூடிய எந்த செயல்களுக்கும் இடம் கொடுத்துவிடக் கூடாது.இரவு பயணங்களைத் தவிர்க்கவேண்டும். முகக்கவசம் அணிந்துவரவேண்டும். கைகளை நன்குகழுவ வேண்டும். அவ்வப்போது கைகளை கிருமிநாசினியால் தூய்மை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.