ஒரு தவறான செய்தியை, அவதூறான செய்தியைச் சொல்லி எப்படியாவது இந்த அரசின் மீது பழிசுமத்த வேண்டும் என்ற நிலை மாறி, ஆக்கப்பூர்வமான நல்ல ஆலோசனையைச் சொல்லுங்கள். நிச்சயமாக எங்களுடைய அரசு கேட்கும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகனுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
தென்சென்னையில் நிவர் புயல் காரணமாக நீர்தேங்கியுள்ள பகுதிகளை முதல்வர் பழனிசாமி இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பதில் அளித்தார். அப்போது அவர், திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் செம்பரம்பாக்கம் ஏரியின் ஷட்டர் மூடப்படாமல் 400 கன அடி நீர் வெளியேறியது குறித்து நேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததற்குப் பதிலளித்தார்.
இது தொடர்பாக முதல்வர் பழனிசாமி அளித்த பேட்டி:
“நாங்கள் நல்லது செய்வதற்காக வந்திருக்கிறோம். அவதிப்படுகின்ற மக்களுக்கு, சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்ற மக்களுக்கு, தாழ்வான பகுதிகளில் வசிக்கின்ற மக்களுக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக அரசு முயற்சி செய்கிறது. அதைப் பாராட்டுங்கள்.
செம்பரம்பாக்கம் ஏரியிலிருந்து உபரிநீர் வீணாக வெளியில் செல்கிறது என்று முன்னாள் அமைச்சர், எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகன் குறிப்பிட்டார். நீர் வீணாகப் போகவில்லை. உபரிநீர் வெளியேறுவதற்காகத் தண்ணீர் திறந்தார்கள். மழை பெய்து 3,000, 4,000 கன அடி தண்ணீர் வருகின்றபொழுது மரங்களும் அடித்துக் கொண்டு வருகின்றன. தண்ணீர் திறந்துவிடும்பொழுது அதில் ஒரு கட்டை சிக்கிக்கொண்டது. அந்தக் கட்டை சிக்கியதால்தான் அந்த லீக்கேஜ் ஆனது.
அந்தக் கட்டை அகற்றப்பட்டுவிட்டபின், ஷட்டர் மூடப்பட்டது. இப்பொழுது வருகின்ற நீரைச் சேமித்து வைத்து, ஏற்கெனவே எவ்வளவு உயரம் நீர் இருந்ததோ, அதே அளவிற்குத் தண்ணீர் தேக்கப்பட்டிருக்கிறது. இதில்கூட அரசியல் செய்ய விரும்புகிறார்கள். இது வேடிக்கையாக இருக்கிறது. அவர் ஒரு பழுத்த அரசியல்வாதி. நீண்டகாலம் பொதுப்பணித் துறை அமைச்சராக இருந்தார. நீண்டகாலம் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.
வேண்டுமென்றே ஒரு தவறான செய்தியை, அவதூறான செய்தியைச் சொல்லி எப்படியாவது இந்த அரசின் மீது பழி சுமத்த வேண்டும் என்ற நிலை எல்லாம் மாறி, நல்ல ஆக்கப்பூர்வமான ஆலோசனையைச் சொல்லுங்கள். நிச்சயமாக எங்களுடைய அரசு கேட்கும். எங்களுடைய அரசைப் பொறுத்தவரை, ஒரு சொட்டுநீர் கூட வீணாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன”.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்தார்.