ஐந்துமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த மூத்த காங்கிரஸ் தலைவர் நிலக்கோட்டையைச் சேர்ந்த ஏ.எஸ். பொன்னம்மாள் (86), உடல்நலம் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு வாரங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் யாரும் சென்று பார்க்கவில்லை என அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக் கோட்டையைச் சேர்ந்தவர் ஏ.எஸ். பொன்னம்மாள். இவர், நிலக்கோட்டை மற்றும் பழநி சட்டப்பேரவைத் தொகுதிகளில் இருந்து ஐந்துமுறை சட்டப்பேரவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டுமுறை தற்காலிக பேரவைத் தலைவராக இருந்த பெருமைக்குரியவர். காங்கிரஸ் கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள் இவரை ‘அக்கா’ என அன்போடு அழைப்பார்கள். அகில இந்திய அளவில் இவரை தெரியாத காங்கிரஸ் தலைவர்கள் யாரும் கிடையாது. அக்கட்சியில் மாநில அளவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
அதிமுக கூட்டணியை எதிர்த்து ஜி.கே. மூப்பனார், த.மா.கா.வை தொடங்கியபோது, அவருக்கு அப்போது ஏ.எஸ். பொன்னம்மாள் பக்கபலமாக இருந்தார். மூப்பனார் மறைவுக்குப் பின், அக்கட்சியில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். ஜி.கே. வாசன் மீண்டும் த.மா.கா.வை தொடங்கியபோதும், அக்கட்சியில் இணையாமல் தற்போது வரை காங்கிரஸ் கட்சியில் உள்ளார்.
ஜி.கே.வாசன் காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்த நேரத்தில், அக்கட்சியின் மாநில தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் மாநிலம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்தார்.
அவர் திண்டுக்கல்லில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்றபோது, முதுமையைப் பொருட்படுத்தாமல் கைத்தாங்கலாக வந்து கலந்துகொண்ட பொன்னம்மாள் பேசுகையில், சரியான நேரத்தில் சரியான நபரிடம் காங்கிரஸ் கட்சி ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றார்.
சமீப காலமாக, முதுமையால் தீவிர அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கி இருந்த அவர், பொது நிகழ்ச்சிகளில் மட்டும் கலந்து கொண்டார்.
கடந்த 2-ம் தேதி சிவகாசியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பியவருக்கு, திடீரென்று உடல் நலக் குறைவு ஏற்பட்டது. அதனால், கடந்த இரண்டு வாரங்களாக, மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை பழைய பாசத்தில் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த விரல்விட்டு எண்ணக்கூடிய த.மா.கா., காங்கிரஸ் நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமே நேரில் சென்று பார்த்து நலம் விசாரித்துள்ளனர்.
இதுவரை தமிழக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் நேரில் சென்று பார்க்கவில்லையே என அக்கட்சி தொண்டர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எங்களுக்கு வருத்தமில்லை: உறவினர்கள்
இதுகுறித்து அவரது உறவினர்களிடம் கேட்டபோது, யாரும் வந்து பார்க்கவில்லை என வருத்தம் அடையவில்லை. வயது முதிர்வால் எல்லோருக்கும் வரக்கூடிய உடல்நலக் குறைவுதான். அரசு மருத்துவமனையில் மருத்துவர், செவிலியர் பொன்னம்மாளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கின்றனர். தற்போது அவருக்கு காலில் கடும் மூட்டுவலி ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது, அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், அவரது தற்போதைய உடல்நிலை இதற்கு ஒத்துழைக்குமா என்பதும் தெரியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர். அதனால், அறுவை சிகிச்சை செய்யவில்லை என்றனர்.