டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் திருச்சியில் இன்று ரயில் மறியலில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் உட்பட 84 பேரை போலீஸார் கைது செய்தனர்.
புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைக் கண்டித்தும், அந்தச் சட்டங்களை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் திருச்சியில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருந்தது.
இதன்படி, இன்று (நவ.30) ஜங்ஷன் ரவுண்டானா பகுதியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ராஜா தலைமையில் மத்திய கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் பி.லெனின், இந்திய மாணவர் சங்க மாநகர் மாவட்டச் செயலாளர் மோகன், மாதர் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சரஸ்வதி உட்பட 70 பேர், மத்திய அரசைக் கண்டித்தும், கோரிக்கைகளை வலியுறுத்தியும் முழக்கமிட்டவாறு ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் நோக்கிச் சென்றனர்.
ரயில் நிலையம் செல்லும் பாதையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் குறிப்பிட்ட இடைவெளியில் 3 தடுப்புகளை போலீஸார் அமைத்திருந்தனர். மேலும், போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஏராளமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
தொடர்ந்து, ஊர்வலமாக வந்தவர்களை முதல் தடுப்புப் பகுதியில் போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கு இரு தரப்பினருக்கும் கடுமையான தள்ளுமுள்ளு நேரிட்டது.
ஆனால், ஊர்வலமாக வந்தவர்கள் அந்தத் தடுப்பு மட்டுமின்றி அடுத்தடுத்து அமைக்கப்பட்டிருந்த மேலும் இரு தடுப்புகளையும் மற்றும் போலீஸாரையும் மீறிக் கொண்டு, ரயில் நிலையம் நோக்கி ஓடினர். ஆனால், ரயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில் பகுதியில் போலீஸார் அனைவரையும் தடுத்து நிறுத்திவிட்டனர்.
இதையடுத்து, ஊர்வலமாக வந்தவர்கள் அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் பரபரப்புக்கு இடையே விராலிமலை சந்திப்பு என்றழைக்கப்படும் மேம்பாலப் பகுதி வழியாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.சுரேஷ் தலைமையில் 11 பேர் இறங்கி, தண்டவாளம் வழியாக ரயில் நிலையத்துக்குள் வந்து, 1-வது நடைமேடையில் மயிலாடுதுறைக்குப் புறப்படத் தயாராக இருந்த கோவை - மயிலாடுதுறை சிறப்பு ரயில் முன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து போலீஸார், ரயில்வே பாதுகாப்புப் படையினர் வந்து அனைவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
தொடர்ந்து, ரயிலை மறித்தவர்கள் மற்றும் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் என 8 பெண்கள் உட்பட 84 பேரை போலீஸார் கைது செய்தனர்.