கரோனா ஊரடங்கால் ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கரோனா ஊரடங்கின் காரணமாக இறுதியாண்டுப் பருவத் தேர்வைத் தவிர, மற்ற அனைத்துப் பருவத் தேர்வுகளையும் ரத்து செய்துள்ள நிலையில், மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் உள்ளிட்ட பணிகளுக்காக ஆகஸ்ட் 14ஆம் தேதிக்குள் தேர்வுக் கட்டணம் செலுத்த அண்ணா பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டிருந்தார்.
தேர்வுக் கட்டணம் செலுத்த நிர்பந்திக்கக் கூடாது என அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் ஹரிஹரன், சுதன், சௌந்தர்யா, தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் சங்கம் ஆகியோர் வழக்குகளைத் தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்குகள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது.
அப்போது, மனுதாரர்கள் தரப்பில், தேர்வு நடத்தப்படாத நிலையில் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கு ஒரு விடைத்தாளுக்கு 42 ரூபாய் என ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் 4 லட்சம் மாணவர்களிடமிருந்து 13 கோடியே 44 லட்சம் ரூபாய் வசூலிக்கப்பட்டு உள்ளதாகவும், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பயிலும் 7 லட்சம் மாணவர்களிடம் தலா 1,450 வீதம் சுமார் 100 கோடி அளவுக்கு தேர்வுக் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதாகவும் வாதிடப்பட்டது.
கரோனா ஊரடங்கால் கடுமையான பொருளாதார நெருக்கடியில் பெற்றோர்கள் சிக்கித் தவிக்கும் இந்தச் சூழலில் தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளை வெளியிடாமல் நிறுத்தி வைத்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில், ஒரு தேர்வுக்கு ஒரு மாணவருக்கான கேள்வித்தாள் மற்றும் விடைத்தாள் தயாரிப்பதற்கான ஊதியம், ஆய்வகச் செலவுகள், இணையதள இணைப்பு, மதிப்பெண் சான்றிதழ் என 148 ரூபாய் செலவிடப்படுவதால், ஒரு தேர்வுக்கு 150 வீதம் கட்டணமாக வசூலிக்கப்பட்டதாகவும், 2020 ஏப்ரல் மாதமே தேர்வுகள் வழக்கம்போல் நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில், விடைத்தாள் திருத்தும் செலவைத் தவிர மற்ற அனைத்தும் முடிந்துவிட்டதாகவும், அதன்படி ஒரு மாணவரின் ஒரு தேர்வுக்கு தற்போது 126 ரூபாய் 10 பைசா செலவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கட்டணம் நியாயமானதுதான் எனவும், உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தேர்வுக் கட்டணம் செலுத்தாத மாணவர்களின் முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளதாகவும், கட்டணத்தைத் திருப்பிச் செலுத்த உத்தரவிட்டால் பல்கலைக்கழகத்துக்கு நிதிச் சுமையை ஏற்படுத்துவதோடு, தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்று விளக்கம் அளிக்கப்பட்டதுடன், மாணவர்களின் வழக்குகளின் பின்னால் கல்லூரிகளும் இருப்பதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த வழக்குகளில் இன்று (நவ. 30) தீர்ப்பளித்த நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ், தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்டதால் மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது எனக் கூறி அந்த மனுக்களைத் தள்ளுபடி செய்தார். ரத்து செய்யப்பட்ட தேர்வுகளுக்குக் கட்டணம் வசூலித்த அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளரின் உத்தரவு செல்லும் என உத்தரவிட்டுள்ளார்.
மாணவர்களிடம் வசூலித்த தேர்வுக் கட்டணத்தை 4 வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்திடம் அந்தந்தக் கல்லூரிகள் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.