தமிழகம்

எவ்வளவு சீக்கிரம் அறிவிக்க முடியுமோ அவ்வளவு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன்: ரஜினி பேட்டி

செய்திப்பிரிவு

ரசிகர்களின் கருத்துகளைக் கேட்டேன். என் நிலைப்பாட்டையும் பகிர்ந்துகொண்டேன். எவ்வளவு சீக்கிரம் எனது முடிவை அறிவிக்க முடியுமோ, அவ்வளவு விரைவில் எனது முடிவை அறிவிப்பேன் என ரஜினி தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் திமுக கூட்டணிக்கு ஆதரவாக வாய்ஸ் கொடுத்தார். அதன்பின்னர் நேரடி அரசியலில் ஈடுபடவில்லை. 2017 டிசம்பர் இறுதியில் அரசியலில் வெற்றிடம் ஏற்பட்டுள்ளது என்றும், தான் அரசியல் கட்சி தொடங்க உள்ளதாகவும் ரஜினி அறிவித்தார். அதன் பின்னர் தீவிர அரசியல் குறித்து எந்தக் கருத்தும் சொல்லாமல் இருந்தார்.

ரஜினி மக்கள் மன்றம் தொடங்கப்பட்டது. ஆனாலும், அரசியல் கட்சியைத் தொடங்காமல் அறிவிப்பு வெளியிடாமல் இருந்த நிலையில், இன்று ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டி மக்கள் மன்றத்தின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துகளைக் கேட்டார்.

இந்தக் கூட்டத்தில் தனது உடல் நிலை, நேரடி அரசியலில் ஈடுபட முடியாத நிலை, அரசியல் கட்சியைத் தொடங்குவதா? உடல்நிலையைப் பார்ப்பதா? அரசியல் கட்சிகளின் நண்பர்கள் அழைப்பை ஏற்று வாய்ஸ் கொடுக்கலாமா? அல்லது மவுனமாக இருக்கலாமா? ஆகியவை குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ரஜினி ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

உடல் நிலை முக்கியம் எனவும், ஆனாலும் அரசியல் கட்சியைத் தொடங்குவது குறித்து ரஜினியின் முடிவுக்குக் கட்டுப்படுவதாக மன்ற நிர்வாகிகள் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து ரஜினிகாந்த் இல்லம் திரும்பினார்.

பின்னர் போயஸ் இல்லத்தில் செய்தியாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டி:

“மாவட்டச் செயலாளர்கள் சந்திப்பு நிகழ்ந்தது. மாவட்டச் செயலாளர்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர். நானும் என்னுடைய பார்வையை அவர்களிடம் பகிர்ந்துகொண்டேன். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ அதை ஏற்றுக்கொள்கிறேன் என்று மன்ற நிர்வாகிகள் தெரிவித்தார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவாக எனது முடிவை அறிவிப்பேன்”.

இவ்வாறு ரஜினி தெரிவித்தார்.

வேறு கேள்விகள் எதற்கும் அவர் பதிலளிக்காமல் சென்றார்.

SCROLL FOR NEXT