தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் கரோனா பரவல் தடுப்புக்காகவும், மழைக்கால பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகள் திறப்பை டிசம்பர் இறுதிவரை திறக்காமல் ஒத்திவைக்க வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழகத்தில் கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சிறப்பான பணிகளை மேற்கொண்டு வரும் வேளையில் மழைக்காலத்தையும் கவனத்தில் கொண்டு மாணவர்கள் நலன் கருதி பள்ளி, கல்லூரிகளை டிசம்பர் மாதம் இறுதி வரை திறக்காமல் இருக்க தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் நல்ல முடிவு எடுத்து அறிவிப்பை வெளியிட வேண்டும்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலத்தால் தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த வாரம் தாக்கிய நிவர் புயலால் பல மாவட்டப் பகுதிகளில் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் ரெட் அலர்ட் அறிவிப்பால் மீண்டும் தமிழகத்தில் மழையோ, கனமழையோ பெய்து பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
மேலும், வானிலை பற்றிய தனியார் ஆய்வு மையக் கண்காணிப்பாளர்களைப் பொறுத்தவரை டிசம்பர் மாதத்திலே மீண்டும் 2 முறை காற்றழுத்தத் தாழ்வின் காரணமாக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மொத்தத்தில் வடகிழக்குப் பருவமழை தொடர்ந்து வருகின்ற 2021-ல் ஜனவரி மாதம் முதல் வாரம் வரை இருக்கும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. தமிழக அரசு கரோனா பரவலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக மேற்கோண்டு வரும் நடவடிக்கைகள் நல்ல பயன் தருகின்ற இவ்வேளையில் டிசம்பர் மாதத்தில் மழைக்கும் வாய்ப்பிருப்பதால் பள்ளி, கல்லூரிகள் டிசம்பர் மாதம் இறுதி வரை திறக்கப்படாமல் இருப்பது சிறந்தது.
இதற்காகப் பள்ளிக் கல்வித்துறை டிசம்பர் மாதம் இறுதி வரை பள்ளி, கல்லூரிகள் உறுதியாக திறக்காமல் இருப்பதற்கான அறிவிப்பை வெளியிட வேண்டும். மேலும், கல்வித்துறையினரின் ஆலோசனைக்கு ஏற்றவாறு அறிவிப்புகள் வெளியிடும்போது தொடர்ந்து ஆன்லைன் மூலம் கல்வியைக் கற்பித்து வகுப்புகள் நடத்துவது ஒருபுறம் என்றால் மறுபுறம் மாணவர்களின் விடுமுறைக்கு ஏற்ப பெற்றோர்கள் அவர்களின் பயணத் திட்டத்தை வகுத்துக் கொள்வார்கள்.
எனவே, தமிழக அரசும், பள்ளிக் கல்வித்துறையும் கரோனா பரவல் தடுப்புக்காகவும், மழைக்கால பாதிப்பில் இருந்து பாதுகாப்பாக இருக்கவும் மாணவர்கள் நலன் கருதி நல்ல முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும் என்று தமாகா சார்பில் வலியுறுத்துகிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.