கார் பந்தய வீரர் பாலவிஜய் 
தமிழகம்

போலி ஆவணங்கள் மூலம் வங்கிகளில் ரூ.3.86 கோடி முறைகேடு; மோசடி வழக்கில் கைதானவர் பிரபல கார் பந்தய வீரர்: தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருவதாக போலீஸார் தகவல்

செய்திப்பிரிவு

போலி ஆவணங்கள் மூலம் வாகனக் கடன் பெற்று பல்வேறு வங்கிகளில் ரூ.3.86 கோடி வரை மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோசடிக்கு மூளையாக செயல்பட்டவர் பிரபல கார் பந்தய வீரர் என்பது தெரியவந்துள்ளது.

சென்னை வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி கிளை மேலாளர் தில்லை கோவிந்தன், சமீபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் அளித்திருந்தார். ‘சென்னையில் உள்ள பல்வேறு பொதுத் துறை வங்கிகளில் போலி ஆவணங்களை கொடுத்து, வாகனக் கடன்கள் மூலம் சொகுசு கார்களை பெற்று, வாகனக் கடனையும் செலுத்தாமல் 2 ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள கும்பலை கைது செய்ய வேண்டும்’ என்று அதில் குறிப்பிட்டு இருந்தார்.

இதுகுறித்து மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நீலாங்கரை, முட்டுக்காடு பகுதிகளில் உள்ள சொகுசு பங்களாக்களில் பதுங்கி இருந்த நீலாங்கரை முகமது முசாமில் (34), அதே பகுதி அய்யாதுரை (32), கோடம்பாக்கம் பாலவிஜய் (35) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

கைது செய்யப்பட்ட 3 பேரும் வருமானவரி தொடர்பான ஆவணங்களை போலியாக உருவாக்கி உள்ளனர். தங்களை பணக்காரர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக நீலாங்கரை, பனையூர், முட்டுக்காடு போன்றஇடங்களில் சொகுசு பங்களாக்களை வாடகைக்கு எடுத்து தங்கி, சொகுசு கார்களையும் வாடகைக்கு எடுத்துள்ளனர்.

பின்னர், இடைத் தரகர்கள் மூலம் பொதுத் துறை வங்கிகளின்மேலாளர்களை நம்பவைத்து ரூ.3.86 கோடி வரை வாகனக் கடன் பெற்று மோசடி செய்துள்ளனர். நுங்கம்பாக்கத்தில் உள்ள பேங்க் ஆப் இந்தியா, எழும்பூரில் உள்ள விஜயா வங்கி, திருவான்மியூர், வேளச்சேரியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி, அடையாறில் உள்ள யூகோ வங்கி, ஆழ்வார்பேட்டையில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இவ்வாறு மோசடி செய்துள்ளனர்.

இதற்கிடையில், மோசடிக்கு மூளையாக செயல்பட்டுள்ள பாலவிஜய் பிரபல கார் பந்தய வீரர். கார் பந்தயங்களுக்கான லீக்ஆட்டங்களில் தனி அணியைஉருவாக்கி அதன் உரிமையாளராகவும் இருந்துள்ளார்.

வங்கிகளில் வாகனக் கடன் மூலம் சொகுசு கார் வாங்குவார். வாங்கிய ஓரிரு வாரங்களிலேயே ஏதாவது குறை சொல்லி, 20 நாட்களிலேயே காரை திருப்பி அனுப்பிவிடுவார். அதற்கான பணமும், கார் ஷோரூம் மூலம் மீண்டும் பாலவிஜய் வங்கிக் கணக்குக்கு வந்துவிடும். பாலவிஜய் உள்ளிட்ட 3 பேர், மோசடிக்கு உடந்தையாக இருந்த கார் டீலர், வங்கி இடைத் தரகர்கள் இந்த பணத்தை பிரித்துக்கொண்டு, இதேபோன்ற மோசடியை பல வங்கிகளிலும் செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள சிலரை தேடி வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

SCROLL FOR NEXT