மாமல்லபுரத்தில் கைப்பற்றப்பட்ட உலோகத்தாலான பூதேவி சிலை கும்பகோணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற 2 பேரை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸார் பிடித்து விசாரித்தனர். அவர்களிடம் ஒன்றரை அடி உயர உலோகத்தாலான பூதேவி சிலை இருந்தது. சிலையின் சக்கரம், சிரசு ஆகிய பகுதிகள் அறுக்கப்பட்டிருந்தன.
சிலையை வைத்திருந்த செங்கல்பட்டு மாவட்டம் நெரும்பூர் இந்திரா நகர் 2- வது தெருவை சேர்ந்த வேல்குமார் (33), வீராபுரம் அம்பேத்கர் தெருவை சேர்ந்த செல்வம் (38) ஆகியோரையும், அவர்கள் அளித்த தகவலின்பேரில், மாமல்லபுரம் செபஸ்டின் (35) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்கள் 3 பேரும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதிபதி இல்லத்தில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்றக் காவலில் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். சிலையும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.