பழநி தண்டாயுதபாணிசுவாமி மலைக்கோயிலில் தீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து கொளுத்தப்பட்ட சொக்கப்பனை. 
தமிழகம்

கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி அண்ணாமலை உச்சியில் ஏற்றப்பட்ட மகா தீபம்: அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கம்

செய்திப்பிரிவு

அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற பக்தர்களின் பக்தி முழக்கத்துக்கு இடையே 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். நினைத்தாலே முக்தி தரும் தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்க கொடிமரத்தில் கடந்த 20-ம்
தேதி கொடியேற்றப்பட்டதும், 10 நாள் உற்சவம் தொடங்கியது.

ஏகன் அநேகன்

விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா நேற்று நடைபெற்றது. மூலவர் மற்றும் அம்மனுக்கு அதிகாலையில் சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், மூலவர் சன்னதியில், பஞ்ச பூதமும் இறைவனே என்ற அடிப்படையில் ஏகன் அநேகன் தத்துவத்தை உணர்த்தும் வகையில், நேற்று அதிகாலை 3.20 மணிக்கு
பரணி தீபம் ஏற்றப்பட்டது. அதன்பிறகு, பிரம்மத் தீர்த்தக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெற்றது. இதையடுத்து தங்கக் கொடி மரம் முன்புள்ள தீப தரிசன மண்டபத்தில், மாலை 4.20 மணியில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் மாலையில் எழுந்தருளினர். அதன்பிறகு, உலகுக்கு ‘ஆண் பெண் சமம்’ என்ற தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில், சிறப்பு அலங்காரத்தில் அசைந்தாடியபடி ‘அர்த்தநாரீஸ்வரர்’ பஞ்சமூர்த்தி களுக்கு மாலை 5.57 மணியளவில் காட்சிக் கொடுத்தார். இந்த நிகழ்வு ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடைபெறும்.

11 நாட்களுக்கு தீப தரிசனம்

இதைத்தொடர்ந்து, 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் நேற்று மாலை 6 மணிக்கு ‘மகா தீபம்’ ஏற்றப்பட்டது. மகா தீபத்தை பருவத ராஜகுல வம்சத்தினர் ஏற்றி வைத்தனர். அப்போது, "அண்ணாமலையாருக்கு அரோகரா" என்ற பக்தர்களின் முழக்கம் விண்ணை முட்டியது. மகா தீப தரிசனத்தை 11 நாட்களுக்கு பக்தர்கள் தரிசிக்கலாம். மகா தீபம் ஏற்றப்பட்டதும், திருக்கோயில் மற்றும் நகரம் முழுவதும் அலங்கார விளக்குகள் ஜொலித்தன. வாண வெடிகள் வெடிக்கப்பட்டன. வீடுகளில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன.
தீபத்தை தரிசனம் செய்ததும் 10 நாள் விரதத்தை பக்தர்கள் நிறைவு செய்தனர்.

விழாவையொட்டி, அண்ணாமலையார் கோயில் முழுவதும் மலர்களாலும், அலங்கார விளக்குகளாலும் அலங்கரிக்கப்பட்டது. அண்ணாமலை உச்சியில் ‘ஜோதி’ வடிவமாக இறைவனே காட்சி தருவதால், கோயிலில் உள்ள மூலவர் சன்னதி மூடப்பட்
டது. பின்னர், பஞ்சமூர்த்திகளின் உற்சவம் இரவு நடைபெற்றது. கோயிலில் இன்று காலையில் இருந்து வழக்கமான பூஜைகள் நடைபெறும். கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்தக் குளத்தில் 3 நாள் தெப்ப உற்சவம் இன்று இரவு தொடங்குகிறது. டிச.3-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

வெறிச்சோடிய கிரிவல பாதை

கரோனா தடுப்பு நடவடிக்கையால், கோயில் உள்ளே மற்றும் மலை மீது ஏறிச் சென்று மகா தீபத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. 2 நாட்களுக்கு கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், கிரிவல பாதை வெறிச்சோடி காணப்பட்டது. உள்ளூர் பக்தர்கள், கோயில் மாட வீதியை வலம் வந்து தரிசனம் செய்ய முயன்றனர். அதற்கு போலீஸார் அனுமதிக்காததால் இந்து அமைப்புகள் மறியலில் ஈடுபட்டன. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் பேச்சுவார்த்தை நடத்தி, மாட வீதியில் வலம் வர உள்ளூர் பக்தர்களை அனுமதித்தார்.

பழநியில் கார்த்திகை தீபம்

திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. முன்னதாக, நேற்று முன்தினம் இரவு மூலவர் சன்னதியில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. நேற்று மாலையில் சின்னக்குமாரர் தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளினார். இதையடுத்து மலைக்கோயிலின் நான்கு திசைகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து கோயில் வெளிப்பிரகாரத்தில் உள்ள தீபக் கம்பத்தில் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சொக்கப்பனை கொளுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரோனா கட்டுப்பாடு காரணமாக பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. தடையை மீறி நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற இந்து முன்னணியினர் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சி மலைக்கோட்டை

கார்த்திகை தீபத் திருநாளையொட்டி திருச்சி மலைக்கோட்டையில் 273 அடி உயரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையார் சன்னதி அருகே 50 அடி உயரத்தில் பிரம்மாண்ட செப்புக் கொப்பரையில் 900 லிட்டர் நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய், நெய் ஆகியவற்றை ஊற்றி 300 மீட்டர் பருத்தி திரியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் 3 நாட்களுக்கு தொடர்ந்து எரியும்.

SCROLL FOR NEXT