உலகில் முதன் முதலில் குதிரை இல்லாமல் இயங்கக்கூடிய 1886-ம் ஆண்டு தயாரிக்கப்பட்ட பழம்பெரும் பென்ஸ் மோட்டார் வேகன் காரின் நகல் (ரெப்ளிகா), சாதனை முயற்சியாக கோவையில் இருந்து சென்னைக்கு நேற்று புறப்பட்டது.
கோவை அவிநாசி சாலையில் ஜி.டி. கார் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கும் பழம்பெரும் கார்களின் வடிவமைப்புகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இதில், 1886-ம் ஆண்டு ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பென்ஸ் மோட்டார் வேகன் கார் வடிவமைப்பு உள்ளது. அந்த காரின் தற்போதைய சந்தை மதிப்பு என்பது ரூ.40 லட்சம் எனக் கூறப்படுகிறது. பென்ஸ் மோட்டார் நிறுவனத்திடம் இருந்து அந்த காரின் வடிவமைப்பு தகவல்களை பெற்று ஜி.டி. நிறுவனத்தால் அந்த கார் 6 மாதங்களுக்கு முன்பு தயாரிக்கப்பட்டதாகும்.
ஜி.டி. அருங்காட்சியகத்துக்கு சொந்தமான அந்த கார், தயாரிப்புக்கு பின்னர் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி டெல்லி செங்கோட்டையில் இருந்து குர்காவுன் வரை 40 கிலோ மீட்டர் தூரம் இயக்கிச் செல்லப்பட்டது. இதைத் தொடர்ந்து, கடந்த ஜூன் 13-ம் தேதி அன்று, கோவை முதல் சேலம் வரை 165 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் ஓட்டிச் செல்லப்பட்டது.
இந்நிலையில், புதிய சாதனை முயற்சியாக கோவையில் இருந்து சென்னை வரை 500 கிலோ மீட்டர் தூரம் இடைநில்லாமல் அந்த கார் பயணம் செய்வதற்கான முயற்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டது. ஜி.டி. கார் அருங்காட்சியகத்தின் நிர்வாக அறங்காவலர் ஜி.டி.கோபால் பயணத்தைத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தூர் அரச வம்சத்தைச் சேர்ந்த மன்வீந்திர சிங் பர்வாணி காரை ஓட்டினார். இந்த பயணம் குறித்து ஜி.டி.கோபால் கூறும்போது, "குதிரை இல்லாமல் இயங்கக்கூடிய வகையில் உலகில் முதன்முதலில் தயாரிக்கப்பட்ட கார் இதுவாகும். பழம்பெரும் (விண்டேஜ்) கார்களுக்காக அருங்காட்சியகம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டபோது இந்த கார் இங்கு வடிவமைக்கப்பட்டது. ஜெர்மனியைச் சேர்ந்த கார்ல் பென்ஸ் என்ற பொறியாளர் இந்த காரை வடிவமைத்தார்.
முதன்முதலில் பெட்ரோல் இன்ஜினுடன், ஒற்றை சிலிண்டர், இரண்டு ஸ்டிரோக் கொண்ட கார் ஆகும். இந்த காரில் கட்டமைப்பும், இன்ஜினும் ஒன்றாக சேர்ந்து ஒரே பாகமாக அமைந்துள்ளது. இந்த இரு இருக்கை கொண்ட வாகனம், கடந்த 1886-ம் ஆண்டு முழுமையாக வடிவமைக்கப்பட்டு காப்புரிமை பெறப்பட்டது. கடந்த 1888-ம் ஆண்டில் கார்ல் பென்ஸின் மனைவி பெர்த்தா பென்ஸ் அவரது வீட்டில் இருந்து 194 கிலோ மீட்டர் வரை ஓட்டிச் சென்றார்.
இதுதான் அதிக தூரம் இந்த காரை ஓட்டியதாக கருதப்பட்டது. மீண்டும் சரித்திரத்தில் புதிய சாதனையை உருவாக்கும் விதமாக 500 கிலோ மீட்டர் இடைநில்லாமல் கோவையில் இருந்து சென்னைக்கு அந்த காரின் மாதிரி தற்போது இயக்கப்படுகிறது. மொத்தம் 6 ஓட்டுநர்கள் மாறிமாறி ஓட்டிச் செல்கின்றனர்.
மணிக்கு 20 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் இந்த கார், நாளை (அக்.15) மாலை சென்று சேரும். பென்ஸின், தண்ணீர் ஆகியவற்றால் இந்த கார் இயங்கக் கூடியது. ஒரு லிட்டர் பென்ஸின் மூலமாக 18 கிலோ மீட்டர் தூரம் வரை இயங்கக்கூடியது’ என்றார்.