உள்ளகரம் - புழுதிவாக்கம் பேருந்து நிலையம் அருகில் உடைந்த பாதாள சாக்கடை குழாயை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரிய ஊழியர்கள். 
தமிழகம்

உள்ளகரம் - புழுதிவாக்கம் பாதாள சாக்கடை திட்டம் தோல்வியா? - பொதுமக்கள் எழுப்பும் கேள்வியும் சந்தேகமும்

செய்திப்பிரிவு

உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் முடிந்து இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பலஇடங்களில் கழிவுநீர் செல்லாமல் அடைப்பு ஏற்பட்டுள்ளதால் இத்திட்டம் தோல்வியா என பொதுமக்கள் மத்தியில் கேள்வியும் சந்தேகமும் எழுந்துள்ளது,

சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலத்தில் 168, 169 வார்டுகளுக்கு உட்பட்ட உள்ளகரம் - புழுதிவாக்கம் பகுதியில் பாதாள சாக்கடை பணிகள் 2011-ம் ஆண்டு ரூ.34.01 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. 2019-ம் ஆண்டு நிறைவுற்ற இத்திட்டத்துக்காக 79,524 கி.மீ தூரத்துக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளன. அனைத்து வீடுகளும் கழிவுநீர் இணைப்பு பெற்று பயன்பெறும் வகையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டு இணைப்புகள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் இத்திட்டம் தோல்வி அடைந்ததாக குடியிருப்போர் நல சங்கத்தினர் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். பாதாள சாக்கடை அமைக்க முறையாக குழாய்கள் பொருத்தப்படாததால், இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்தஉடனேயே குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு தெருக்களில் கழிவுநீர் வெளியேறும் அவலம் நிலவுகிறது.

இப்பணியில் 4 முதல் 10 அடி ஆழத்தில் 4 இஞ்ச் அகல மண் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இக்குழாய்கள் அடைப்பு ஏற்படும் தன்மை கொண்டதால் பல இடங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் கனரக வாகனங்கள் செல்லும் சாலைகளில் கான்கிரீட் மேன்ஹோல் கட்ட வேண்டுமென்ற உத்தரவை பின்பற்றாமல், செங்கல் மூலம் கட்டியதால் வாகனப் போக்குவரத்தால் மேன்ஹோல்கள் உடைந்து விழுகின்றன.

இதுகுறித்து குடியிருப்போர் நலச் சங்கத்தைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: பல ஆண்டுகளாக பல்வேறு போராட்டங்களை நடத்திய பிறகு, பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டு, இணைப்புகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், தற்போது பல இடங்களில் கழிவுநீர் சரிவர வெளியேறாமல் சாலையிலேயே ஓடி துர்நாற்றம் வீசுகிறது. பல இடங்களில் லாரிகள் மூலம் கழிவுநீர் அகற்றப்படுகிறது. இதனால் இத்திட்டம் தோல்வி அடைந்துள்ளது. ஒப்பந்தக்காரர்களின் பணிகளை முறையாக கண்காணிக்காமல் கமிஷனில் மட்டும் குறியாக இருந்ததால், பணிகள் அரைகுறையாக நடைபெற்றுள்ளன. தரமற்ற குறுகிய அகலம் உடைய குழாய்களை பதித்துள்ளதால், ஆங்காங்கே குழாய்கள் உடைந்துள்ளன.

மாதந்தோறும் கட்டணம் கட்டவில்லை எனில் அபராதம் விதிக்கும் இவர்களுடைய தவறை யார் கேட்பது? குடிநீர் வாரியம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்

இதுகுறித்து குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: உள்ளகரம் -புழுதிவாக்கம் பாதாள சாக்கடை திட்டத்தில் இதுவரை 2,400-க்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. மனுக்கள் மீது உரிய ஆய்வு கொண்டு உடனடியாக இணைப்பு வழங்கப்படுகிறது.

திட்டப் பணிகள் முடிந்தவுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டு, பல அடைப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு சீர் செய்யப்பட்டன. திட்டம் தொடங்கி 8 ஆண்டுகள் ஆனதால், பூமியில் பல இடங்களில் குழாய் உடைந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது. அவற்றையும் சரிசெய்து வருகிறோம். அதனால் லாரிகள் மூலம் அங்குள்ள மேன்ஹோல்களில் இருந்து கழிவுகள் அகற்றப்படுகின்றன. திட்டம் தோல்வி அடையவில்லை. மேலும் 2,000 குடிநீர் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன என்றனர்.

SCROLL FOR NEXT