திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் மலைக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. 
தமிழகம்

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கை மாவட்டங்களில் பல்வேறு கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு வழிபாடு

செய்திப்பிரிவு

கார்த்திகை தீப திருநாளை ஒட்டி சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.

காஞ்சிபுரம் நகரப் பகுதியில் பஞ்சபூத ஸ்தலங்களில் ஒன்றாக விளங்கும் ஏகாம்பரநாதர் கோயிலில் கார்த்திகை தீபத்தை ஒட்டி மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதேபோல் கச்சபேஸ்வரர், முக்தீஸ்வரர், கயிலாசநாதர், சத்யநாதஸ்வாமி, வழக்கறுத்தீஸ்வரர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் மகாதீப சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மேலும், குமரக்கோட்டம் உள்ளிட்ட முருகன் கோயில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றத்தில் 4 வேதங்களால் உருவான மலை மீது சுயம்பு மூர்த்தியாக வேதகிரீஸ்வரர் அருள்பாலிப்பதாக ஐதீகம். இதனால், திருவண்ணாமலைக்கு இணையாக பவுர்ணமி நாட்களில் இங்கும் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். இங்கு கார்த்திகை மகாதீபம் திருவிழா நேற்று நடைபெற்றது. கரோனா அச்சம் காரணமாக மலைக்கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. மேலும், சுவாமி வீதி உலாவும் ரத்து செய்யப்பட்டது.

எனினும், கோயில் பணியாளர்கள் மற்றும் அர்ச்சகர்கள் மூலம் மலைக்கோயிலில் மகாதீபம் ஏற்றப்பட்டது. மலையடிவாரத்தில் இருந்த பக்தர்கள் ‘அரோகரா அரோகரா’ என முழக்கமிட்டு சுவாமியை வழிபட்டனர். மேலும், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையை கிரிவலம் வந்து சுவாமியை வழிபட்டனர்

இதேபோல், அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர், பசுபதீஸ்வரர், கூவத்தூர் வாலிஸ்வரர், திருக்கழுக்குன்றம் ருத்ரகோட்டீஸ்வரர் உட்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவாலயங்களில் தீபம் ஏற்றப்பட்டது. கார்த்திகை தீபத்தை ஒட்டி, வீடுகளில் பெண்கள் சிறப்பு வழிபாடுகள் செய்து மாலையில் வீட்டின் முன்பு அகல் விளக்குகளை ஏற்றினர். இதனால், குடியிருப்பு சாலைகள் விளக்கொளியில் ஜொலித்தன.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, நேற்று அதிகாலை மூலவர் சுப்ரமணிய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, தங்க கிரீடம், பச்சை மாணிக்க மரகத கல், வைரம், தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்ட சுப்ரமணிய சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிறகு, காலை 10 மணியளவில், காவடி மண்டபத்தில் உற்சவர் முருகனுக்கு பஞ்சாமிர்தம் அபிஷேகம் நடைபெற்றது.

கரோனா அச்சம் காரணமாக மாடவீதிகளில் சுவாமி உலா வருவதற்கு பதில், கோயிலின் மேல் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது, கோயில் எதிரே உள்ள 150 அடி உயர பச்சரிசி மலையில் 100 கிலோ நெய் மற்றும் 100 அடி நீள திரியால் தயாரிக்கப்பட்ட விளக்கில், தீபம் ஏற்றப்பட்டது.

தொடர்ந்து, கோயில் மேல் பிரகாரத்தில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றப்பட்டது. இந்த தீபம் ஏற்றும் நிகழ்வில் பக்தர்களுக்கு அனுமதிஅளிக்கப்படவில்லை. அதேநேரத்தில் நேற்று வழக்கம்போல், சமூக இடைவெளியை கடைபிடித்து, பக்தர்கள் கோயிலில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

அதேபோல், திருவள்ளூர் தீர்த்தீஸ்வரர் கோயில், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயில், திருப்பாச்சூர் வாசீசுவர சுவாமி, பஞ்செட்டி அகத்தீஸ்வரர் கோயில், திருப்பாலைவனம் திருப்பாலீஸ்வரர் கோயில் உள்ளிட்ட சிவாலயங்கள் மற்றும் முருகன் கோயில்களில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி, கார்த்திகை தீபத் திருவிழா கொண்டாடப்பட்டது.

கபாலீஸ்வரர் கோயிலில்…

மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மாலையில் அண்ணாமலை சன்னதி மண்டபத்துக்கு மேல் தீபம் ஏற்றப்பட்டது. இதையடுத்து கோயிலுக்கு வெளியே இரவு 7 மணியளவில் சொக்கப்பனை வைபவம் நடைபெற்றது. இதேபோல் வடபழனி முருகன் கோயில், கந்தகோட்டம் முருகன் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

SCROLL FOR NEXT