வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தாமல் நிறுத்தியுள்ள தால் வாகனங்கள் வழங்கப் பட்டதற்கான அரசின் நோக்கம் நிறைவேறாமல் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் விபத்து மற்றும் உயிர் காக்கும் அவசர சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் சேவை பயன்பாட்டில் உள்ளது. தனியார் நிறுவனத்தின் பராமரிப் பில் உள்ள ஆம்புலன்ஸ் சேவைக் கான நிதியை அரசு ஒதுக்கீடு செய்வதுடன் மாவட்ட தேவைக்கு ஏற்ப ஆம்புலன்ஸ் வாகனங்கள் வழங்கப்படுகின்றன.
வேலூர் மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் இறுதியில் கரோனா பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு, 108 ஆம்புலன்ஸ் சேவைக்கான தேவையும் குறைந்தது.தொடர்ந்து, கரோனா தொற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பயன்பாட்டில் இருந்த சில 108 ஆம்புலன்ஸ்கள் மற்றும் தனியார் ஆம்புலன்ஸ்கள் கரோனா நோயாளிகளை அழைத்துச் செல்ல பயன்படுத்தி வந்தனர். கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தற்போது குறைந்து வரும் நிலையில், மீண்டும் விபத்து மற்றும் அவசர சிகிச்சைக்காக அந்த ஆம்புலன்ஸ் வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டத்துக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் இதில், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள மரத்தடியில் நிறுத்தி வைத்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அதேபோல், சில நாட்களுக்கு முன்பு வழங்கப்பட்ட மேலும், 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வேலூர் பென்ட்லெண்ட் அரசு மருத்துவ மனையில் நிறுத்தி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டத்தில் ஏற்கெனவே ஆம்புலன்ஸ் வாகனங்களின் பற்றாக்குறையால் விபத்து காலங்களில் உரிய நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு உள்ளது.
எனவே, அரசு சார்பில் வழங்கப் பட்டு பயன்படுத்தாமல் உள்ள ஆம்புலன்ஸ் வாகனங்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
இது தொடர்பாக 108 ஆம்புலன்ஸ் சேவை நிர்வாகத் தரப்பில் விசாரித்த போது, ‘‘வேலூர் மாவட்டத்துக்கு வரப் பெற்ற 4 ஆம்புலன்ஸ்களில் ஒன்று பீஞ்சமந்தை மலை கிராமத்துக்கும் மற்றொன்று குடியாத்தம் நகராட்சியில் கரோனா தொற்று எண் ணிக்கை அதிகமாக இருந்ததால் அந்தப்பகுதிக்கு வழங்கப்பட்டது. மற்ற 2 ஆம்புலன்ஸ்கள் கரோனா நோயாளிகள் பயன் பாட்டுக்காக தயாராக நிறுத்தி வைத்திருக்கிறோம். தற்போது, கரோனா தொற்று எண்ணிக்கை குறைவாக இருந்தாலும் வரும் நாட்களில் அதிகரிக்கும் என்பதால் அப்போது தேவை இருக்கும்.
வேலூர் மாவட்டத்துக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு மேலும் 2 ஆம்புலன்ஸ் வாகனங்கள் வந்துள்ளன. அதையும் கரோனா பயன்பாட்டுக்காக தயாராக வைத் துள்ளோம். இந்த வாகனங்களை அவ்வப்போது இயக்கி முறையாக பராமரித்து வருகிறோம். வேலூர் மாவட்டத்தில் தற்போது 21 ஆம்புலன்ஸ் வாகனங்கள் உள்ளன’’ என்றனர்.
அனைவரது விருப்பம்...
கரோனா பயன்பாட்டுக்காக தயார் நிலையில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தியிருந்தாலும் தற்போதைக்கு இந்த வாகனங்கள் மக்களின் சேவைக்கு தேவையாக இருக்கிறது. மரத்தடியில் நிற்கும் ஆம்புலன்ஸ் வாகனங்களை பொது மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.