கார்த்திகை தீபத் திருவிழாவில் திருவண்ணாமலை அண்ணாமலை யார் கோயில் உள்ளே பக்தர்களை அனுமதிக்க மறுத்துவிட்டு விஐபி, விவிஐபிக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை என்ற காரணத்தைக் கூறி திருவண்ணாமலை அண்ணா மலையார் கோயிலில் நேற்று நடைபெற்ற கார்த்திகை தீபத் திருவிழாவில் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
அதேபோல், கிரிவலம் செல்லவும் தடை விதித்தது. மேலும், வெளியூர் பக்தர்களை, திருவண்ணாமலை நகருக்குள் 3 நாட்கள் வரவும் அனுமதி மறுத்தது. நிகழ்ச்சியில் சம்பந்தப் பட்டவர்கள் மட்டுமே, கோயில் உள்ளே அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டது.
தீபத் திருவிழாவில் பக்தர் களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அடுக்கடுக்காக விதித்த, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை யினர், அண்ணாமலையார் கோயில் உள்ளே விஐபி, விவிஐபிக்கள், அரசியல் கட்சியினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வழக்கம் போல் அனுமதி அளிக்கப்பட்டது. சிவப்பு கம்பள வரவேற்புக்கு நிகரான வரவேற்பு அளிக்கப்பட்டது. விவிஐபிக்களாக மடப்பள்ளி கட்டிடத்தின் மாடியில் உள்ள இருக்கைகளை சுத்தம் செய்து, உயர் ரக வெள்ளை துண்டுகள் மூலம் பாதுகாத்து வைத்தனர். அந்த இருக்கையில் மற்ற நபர்கள் அமர்ந்துவிடாதபடி, சீருடை அணியாத காவல்துறை மூலம் பாதுகாக்கப்பட்டது.
மேலும், தங்கக் கொடி மரம் அருகே நூற்றுக்கணக்கான விவிஐபிக்கள் உள்ளிட்டவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், கட்டிடத்தின் உள்ளே நாற்காலி போடப்பட்டு அமர வைக்கப்பட்ட னர். கரோனா பரவலை தடுக்க முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும்சுகாதாரத் துறை அறிவுறுத்தி உள் ளது. அந்த உத்தரவு நேற்று காற்றில் பறந்தது.
ஒவ்வொரு ஆண்டும், அதிகார வர்க்கத்தினருக்காகவே நடத்தப்பட்டதாக கூறப்படும் கார்த்திகை தீபத் திருவிழா, இந்தாண்டும் அதனை உறுதி செய்துள்ளது.