புதுச்சேரி பழைய பஸ் நிலையம் தமிழ்நாடு அரசு பேருந்து பணிமனையில் விழுந்த மரத்தை அப்புறப்படுத்தும் ஊழியர்கள் | படம்: எம்.சாம்ராஜ் 
தமிழகம்

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழு டிச.2-ம் தேதி புதுச்சேரி வருகை

செ.ஞானபிரகாஷ்

நிவர் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மதிப்பிட மத்தியக் குழு புதுச்சேரிக்கு டிசம்பர் 2-ம் தேதி வருகிறது.

புதுச்சேரி அருகே நிவர் புயல் கரையைக் கடந்தது. நிவர் புயலால் நகரப் பகுதிகளில் மரங்கள் வேரோடு விழுந்தன. பல வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கிராமப்புறங்களில் விவசாய நிலங்களில் நீர் புகுந்து பயிர்கள் பாதிக்கப்பட்டன. புயலால் புதுவையில் ரூ.400 கோடி சேதம் ஏற்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்திருந்தார். இடைக்கால நிவாரணமாக மத்திய அரசு ரூ.100 கோடி வழங்க வேண்டும் எனக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்த நிலையில், தமிழகத்தில் புயல் சேதத்தைப் பார்வையிட்டு, சேதத்தைக் கணக்கிட 7 அதிகாரிகள் கொண்ட குழு நாளை தமிழகத்திற்கு வருகிறது.

அதைத் தொடர்ந்து புதுவையிலும் அக்குழுவினர் புயல் சேதத்தைப் பார்வையிட உள்ளனர். பின்னர் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரையும், அதிகாரிகளையும் சந்தித்தும் பேசுகின்றனர். அதையடுத்து புதுவையில சேதம் எவ்வளவு , நிவாரணம் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்வர்.

மத்தியக் குழு வருகைத் தொடர்பாக முதல்வர் நாராயணசாமியிடம் கேட்டதற்கு, "மத்திய குழு புதுவைக்கு வருவதாகக் கடிதம் வந்துள்ளது. அநேகமாக வருகிற டிசம்பர் 2-ம் தேதி புதுவைக்கு வந்து சேத விவரங்களைக் கணக்கிடுவார்கள்" என்று குறிப்பிட்டார்.

SCROLL FOR NEXT