கரோனா காலத்தில், மழைக் காலத்தில் சுகாதார நிலையங்களுக்குச் செல்ல ஏற்படும் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு, தமிழக அரசு நடமாடும் மினி கிளினிக்குகள் தொடங்க இருப்பது வசதியில்லாத சாதாரண குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது என ஜி.கே.வாசன் பாராட்டியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழகத்தில் கரோனாவுக்கு முடிவு எட்டப்படாமல், மருந்தும் இல்லாத சூழலில், புயலால், தொடர் மழை என்ற அறிவிப்பால் மக்கள் அச்சப்படுகின்ற இவ்வேளையில் மக்களுக்குச் சுகாதாரப் பாதுகாப்பும், நம்பிக்கையும் ஏற்படும் வகையில் தமிழக அரசு 2,000 நடமாடும் மினி கிளினிக் தொடங்க இருப்பது பெரிதும் பாராட்டுக்குரியது.
தமிழகம் முழுவதும் 2,000 நடமாடும் மினி கிளினிக் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது, பாராட்டுக்குரியது. காரணம் இந்த நடமாடும் மினி கிளினிக்குகள் மூலம் வசதி இல்லாத சாதாரண ஏழை, எளிய மக்கள்தான் பெரும் பயன் அடைவார்கள். மேலும் மினி கிளினிக்குகள் மூலம் அனைத்துத் தரப்பு மக்களும் பயன் பெறுவார்கள்.
கடந்த 8 மாத காலமாக கரோனாவின் தாக்கம் தொடர்ந்து கொண்டிருப்பதால் தமிழகம் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில் தமிழக அரசின் சிறந்த திட்டமிடல் மற்றும் தொடர் முயற்சி, பல முக்கியத் துறைகளின் அர்ப்பணிப்பான பணிகள் காரணமாக கரோனா தாக்கம் குறைந்து வருகிறது.
இந்தியாவில் பல மாநிலங்களை ஒப்பிடும்போது தமிழகம் கரோனா தடுப்பில் படிப்படியாக வெற்றிபெற்று வருவது மக்கள் நலன் காக்கும் நற்செயலாகும். அதே சமயம் வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே அறிவித்த நிவர் புயலைத் தொடர்ந்து வருகின்ற டிசம்பர் மாதமும் புயல் உருவாகும் சூழலும், தமிழகத்தில் விட்டுவிட்டு தொடர் மழை பெய்ய வாய்ப்பிருப்பதும் கணிக்கப்பட்டுள்ளது, செய்தியாகவும் வெளிவந்துள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல், புயல், மழை, காற்று மற்றும் டெங்கு காய்ச்சல் போன்றவற்றால் சுகாதாரச் சீர்கேடும், மக்களின் உடல்நலனில் பாதிப்பும் ஏற்படுமோ என்ற அச்சம் மக்களுக்கு ஏற்படக்கூடிய இந்நேரத்தில் தமிழக அரசு நடமாடும் மினி கிளினிக்குகள் தொடங்க இருப்பது ஏழை, எளிய, நடுத்தர மக்களின் சுகாதாரத்தையும், உடல்நலனையும் கவனத்தில் கொண்டு மிகுந்த அக்கறையோடு எடுத்த சிறப்பான முடிவு.
அதாவது கரோனா காலத்தில், மழைக் காலத்தில் சுகாதார நிலையங்களுக்குச் செல்ல ஏற்படும் சிரமங்களைக் கவனத்தில் கொண்டு நடமாடும் மினி கிளினிக்குகள் தொடங்க இருப்பது வசதியில்லாத சாதாரண குடும்பத்தினருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக மினி கிளினிக்குகள் மூலம் நோய்த்தொற்றின் பரவல் மேலும் குறையும்.
எனவே, 2,000 நடமாடும் மினி கிளினிக் தொடங்கப்படும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருப்பதற்கு தமாகா சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.