சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக - தமாகா கூட்டணி தொடரும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் 7-ம் ஆண்டு தொடக்கவிழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. இதில், கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் பங்கேற்று கொடியேற்றி வைத்து இனிப்புகளை வழங்கினார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
‘நிவர்’ புயலை எதிர்கொள்ளும் வகையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் கலந்து ஆலோசித்து சிறப்பாக பணியாற்றியுள்ளனர். அவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். புயல் காரணமாக விவசாயிகள், தாழ்வானஇடங்களில் தங்கி இருந்தவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அவர்களுக்கு தமிழகஅரசு உடனடியாக உதவி செய்து இருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான கணக்கெடுப்பு நடந்து வருகிறது. மத்தியில் பிரதமரும் நிவாரண நிதியை வழங்கி இருக்கிறார். இவற்றை குறிப்பிட்ட காலக்கெடுக்குள் மக்களுக்கு வழங்க வேண்டும்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலிலும் அதிமுக கூட்டணியில் தமாகா தொடரும். டிசம்பர் 1 முதல் 15-ம் தேதிக்குள் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதியிலும் நிர்வாகிகள் கூட்டம் நடத்தப்படும். இந்த கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
கட்சி தொடக்க விழாவில் தமாகா மாநில பொதுச்செயலாளர் ஏ.ஞானசேகர், தலைமை நிலையச் செயலாளர் ஜி.ஆர்.வெங்கடேஷ், மாவட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.