திருவண்ணாமலை அண்ணாமலை உச்சிக்கு நேற்று கொண்டு செல்லப்பட்ட மகா தீபக் கொப்பரை. 
தமிழகம்

2,668 அடி உயர அண்ணாமலை உச்சியை சென்றடைந்தது கொப்பரை- தி.மலையில் இன்று மாலை 6 மணிக்கு மகா தீபம்

செய்திப்பிரிவு

2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மகா தீபம் ஏற்றுவதற்காக 200 கிலோ எடை கொண்ட கொப்பரை நேற்றுமலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா, துர்க்கை அம்மன் உற்சவத்துடன் கடந்த 17-ம் தேதி தொடங்கியது. பின்னர், மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடி மரத்தில் கடந்த 20-ம் தேதி கொடியேற்றம் நடைபெற்றது. அதன்பிறகு, 10 நாள் உற்சவம் ஆரம்பமானது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, மாட வீதியில் பஞ்சமூர்த்திகள் மற்றும் 63 நாயன்மார்கள் வீதியுலா, வெள்ளி தேரோட்டம், மகா தேரோட்டம், பிச்சாண்டவர் உற்சவம் ஆகிய அனைத்து உற்சவங்களும் ரத்து செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக, கோயிலில் உள்ள 5-ம் பிரகாரத்தில் பஞ்சமூர்த்திகளின் பவனி கடந்த 9 நாட்களாக நடைபெற்றன.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயிலில் உள்ள மூலவர் சன்னதியில் இன்று (29-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு, ஏகன் அநேகன்தத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் பரணி தீபம் ஏற்றப்படுகிறது. பின்னர், கோயிலில் உள்ள தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, ஆணும் பெணும் சமம் என்பதை உலகுக்கு உணர்த்தும் வகையில், சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் காட்சித் தருகிறார். இந்தாண்டு, கோயில் உள்ளே சென்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படவுள்ளது. மகா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு ஏற்றப்படும். அண்ணாமலையில் ஜோதியாக இறைவன் காட்சி கொடுப்பதால், மாலை 6 மணிக்கு மூலவர் சன்னதியின் நடை அடைக்கப்படும். மறுநாள் (நாளை 30-ம் தேதி) அதிகாலை முதல் வழக்கம்போல் மூலவர் சன்னதியில் பூஜைகள் செய்யப்படும்.

மகா தீபம் ஏற்றப்படும் கொப்பரைக்கு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று காலை சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர், கோயிலில் இருந்து மலை உச்சிக்கு கொப்பரை கொண்டு செல்லப்பட்டது. அப்போது அண்ணாமலையாருக்கு அரோகரா என பக்தர்கள் முழக்கமிட்டனர். இதேபோல், தீபம் ஏற்ற பயன்படுத்தப்பட உள்ள ஆயிரம் மீட்டர் காடா துணி மற்றும் 3,500 கிலோ நெய் கொண்டு செல்லப்படுகிறது.

மகா தீபத்தைத் தொடர்ந்து 3 நாள் தெப்ப உற்சவம் நாளை (30-ம் தேதி) இரவு தொடங்குகிறது. நகரில் உள்ள ஐயங்குளத்தில் நடைபெற்ற தெப்ப உற்சவமும் தடை செய்யப்பட்டு, கோயிலில் உள்ள பிரம்ம தீர்த்தக்குளத்தில் நடைபெற உள்ளது. அதன்படி, முதல் நாளில் சந்திரசேகரர், 2-வது நாளில் பராசக்தி அம்மன், 3-வது நாளில் முருகர் ஆகியோரது தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து, டிசம்பர் 3-ம் தேதி நடைபெற உள்ள சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

SCROLL FOR NEXT