வீடியோவில் பேசும் எஸ்.ஏ.பாஷா. 
தமிழகம்

சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ: குண்டு வெடிப்பு வழக்கு கைதியின் பரோலை ரத்து செய்ய காவல் துறை பரிந்துரை

செய்திப்பிரிவு

கோவை உக்கடம் அருகேயுள்ள பிலால் எஸ்டேட் பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.ஏ.பாஷா(73). தடைசெய்யப்பட்ட அல் உம்மா இயக்கத்தலைவரான இவர், கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சமீபத்தில் 15 நாள் பரோலில் வெளியே வந்த அவர், தனது வீட்டில் தங்கியுள்ளார். இருபதுக்கும் மேற்பட்ட போலீஸார் அவரைக் கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில், சமூக வலை தளங்களில் நேற்று ஒரு வீடியோ பரவியது. 2 நிமிடங்கள் 27 விநாடிகள் ஓடும் அந்த வீடியோவில் பேசும் பாஷா, ‘‘சென்னை, கடலூர் மற்றும் தென் மாவட்டங்களில் பலத்த மழையால் வெள்ளம் ஏற்பட்டு, மக்கள்துயரத்துக்குள்ளாகினர். சாதி, மதம், இனம், மொழி வேறுபாடின்றி அனைத்து மக்களும் இணைந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியது மனதை நெகிழச் செய்தது. குறிப்பாக, இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்த அனைத்து அமைப்புகளும் அதில் ஈடுபட்டது மனதை நெகிழச் செய்தது. பாதிக்கப்பட்ட வர்கள் மறு வாழ்வு பெற வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

"பரோலில் வெளியே வந்த பாஷாவிதிகளை மீறி வீடியோ வெளியிட் டுள்ளார். அவரது பரோலை ரத்துசெய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்" என்று கோவை மாநகர் மாவட்ட பாஜக, பாரத் சேனாஅமைப்பு நிர்வாகிகள் காவல்ஆணையரிடம் மனு அளித்துள்ள னர். காவல் துறை தரப்பில் கூறும்போது, "பாஷாவின் பரோலை ரத்து செய்ய பரிந்துரைத்து, சிறைத் துறை கண்காணிப்பாளருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’’ என்றனர். சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘பாஷாவின் பரோலை ரத்து செய்யுமாறு காவல் துறை பரிந்துரைத்த கடிதம் எங்களுக்குக் கிடைத்துள்ளது. இது தொடர்பாக சிறைத் துறை டிஐஜியிடம் ஆலோசித்து, அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றனர்.

SCROLL FOR NEXT