மரக்காணத்தில் பெய்த மழையில் குரும்பரம் ஏரி நிரம்பி உபரி நீர் மதகு வழியாக பெருக்கெடுத்துச் செல்கிறது. 
தமிழகம்

3 நாட்களில் பெய்த கனமழையில் 221 ஏரிகள் நிரம்பினாலும் விழுப்புரம் மாவட்டம் வறட்சியில் சிக்கும் ஆபத்தில் உள்ளது

எஸ்.நீலவண்ணன்

வடகிழக்கு பருவமழையில் (அக்டோபா் முதல் நவம்பர் 25-ம் தேதிவரை) விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக 569.19 மி.மீ பதிவாகவேண்டும். கடந்த அக்டோபரில் தொடங்கி, கடந்த 4 நாட்களுக்கு முன் (நவ. 25) பெய்த மழையையும் சோ்த்து, 392.24 மி.மீ. அளவு பதிவாகியுள்ளது.

வழக்கமாக நவம்பர் மாதத்தில் 317.80 மி. மீ. மழை பெய்யக் கூடிய நிலையில் நேற்று வரை 270.20 மி.மீ. அளவுக்கு மழை பெய்துள்ளது. கடந்த நவம்பா் மாதம் முழுவதும் 97.23 மி.மீ. அளவில்தான் மழை பெய்தது. ‘நிவர்’ புயலின் பெரு மழையே நிலைமையை பெருமளவு சரி செய்திருக்கிறது.

விழுப்புரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் பெய்ய வேண்டிய 106 செ.மீ. மழைக்கு தற்போதுவரை 76.9 செ.மீ. மழை பதிவாகி யுள்ளது. கடந்த 3 நாட்களில் மாவட்டத்தில் சராசரியாக 178.23 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 1,348 ஏரிகளில், பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 506 ஏரிகளில் 62 ஏரிகளும், ஊராட்சி ஒன்றியங்களின் கட்டுப்பாட்டில் உள்ள 842 ஏரிகளில் 159 ஏரிகளும் முழுமையாக நிரம்பியிருக்கின்றன. 147 ஏரிகள் 75 சதவீதம் நிரம்பியும், 370 ஏரிகள் 50 சதவீதம் நிரம்பியும், 166 ஏரிகள் 50 சதவீதத்திற்கு குறைவாக நிரம்பியும் உள்ளது. மொத்தமாக 221 ஏரிகள் மாவட்டத்தில் நிரம்பியுள்ளது. மொத்தமுள்ள 1,348 ஏரிகளில் 16.3 சதவீத ஏரிகள் மட்டுமே முழுமையாக நிரம்பியுள்ளது.

திண்டிவனம் அருகே வீடூா் அணையின் 32 அடி கொள்ளளவில் 24.7 அடி மட்டுமே நிரம்பியுள்ளது.

‘நிவர்’ புயலில் மாவட்டத்தில் அதிக அளவு மழை பெய்தாலும் சராசரி நிலையை எட்ட முடியவில்லை. வரும் டிசம்பரில் அடுத்தடுத்து புயல் உருவாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அது விழுப்புரம் மாவட்டத்தை பெரிதாக பாதிக்காது என்றாலும், மழைப் பொழிவை எதிர்பார்க்கலாம்.

எனவே அடுத்தடுத்த நாட் களில் மழை பெய்தாலும் அதனைமுழுமையாக தேக்கும் அளவுக்குஏரிகளில் முழுமை யாக ஆக்கிரமிப் புகள் அகற்றப்பட வில்லை.

அண்மையில் விழுப்புரத்தில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் பங்கேற்றவர்களும் ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக தங்கள் ஆதங்கத்தை தெரியப் படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக விழுப்புரம் மாவட்ட விவசாய சங்கங்களின் நிர்வாகிகள் கூறியது,

கடந்த 13ஆண்டுகளில் விழுப்புரம் மாவட்டத்தில் சராசரியாக பெய்த மழை அளவு (மில்லி மீட்டரில்)ஆண்டுமழையளவு20081282.172009943.9920101343.9420111115.062012900.082013795.292014980.4220151390.252016563.6820171083.832018648.252019915.702020 (நவ.26 வரை)769.01கடந்த 13ம் ஆண்டுகளில் 2015-ம் ஆண்டு அதிகப் படியாக 1390.25 மி.மீ மழை பெய்துள்ளது. “விழுப்புரம் மாவட்டத்தில் பல ஏரிகள் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கின்றன. மழை யால் ஏரி நிரம்பினாலும், ஆக்கிரமிப்பாளர்கள் தேங்கும் நீரை வெளியேற்றி விடுகின்றனர். வாய்க்கால் வரப்புகள் முழுமையாக தூர்வாரப் படுவதில்லை. விவசாயிகளின் போர்வையில் உள்ள ஆளும்கட்சியினர் முறையாக குடிமராமத்துப் பணிகளை மேற்கொள்ளவில்லை. ஆளும்கட்சியினராக இருப்பதால் கீழ்மட்ட அலுவலர்களால் அவர்களை கட்டுப்படுத்த இயலவில்லை.

குடிமராமத்தில் 25 சதவீத பணிகளை முடித்து முழுமையாக பணிகள் முடிந்ததாக கணக்கு காட்டப்படுகிறது.

அரசின் ஆவணங்களில் தூர் வாரியதாக கணக்கில் இருந்தாலும் முறையாக தூர் வாரப்படுவதில்லை’‘ என்று இங்குள்ள விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.

தேசிய ஊரக வேலைத் திட்டத்தின் கீழ் ஏரியை தூர் வாரச் செல்லும் கிராமத்தினரும் அதை அக்கறையோடு செய்வதில்லை. இந்த ஏரியில் தங்கும் நீர் நமது பயன்பாட்டுக்கானது இல்லை என்கிற மனநிலையே அவர்களிடம் இருக்கிறது.

முறையாக திட்டமிட்டு நீர்நிலைகளை பராமரிக்காத நிலையில் எத்தனை பெரு மழை வந்தாலும் அதனால் பயனில்லை என்பதே வருத்தமான உண்மை.

SCROLL FOR NEXT