தமிழகம்

ஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடக் கூடாது: பெட்ரோல் பங்குகளுக்கு போலீஸ் உத்தரவு

செய்திப்பிரிவு

சென்னையில் ஹெல்மட் அணியாமல் வரும் வாகன ஓட்டிகளுக்கு பெட்ரோல் போடக்கூடாது, என பெட்ரோல் பங்குகளுக்கு சென்னை போக்குவரத்து காவல்துறை உத்தரவிட்டுள்ளது.

சாலை விபத்துகளில் அதிகம் உயிரிழப்பது இரு சக்கர வாகன ஓட்டிகள், அதிலும் அதிகமான உயிரிழப்புக்கு காரணமாக அமைவது தலைக்காயங்களால் நிகழ்வதே. தலைக்காயங்களுக்கு காரணம் ஹெல்மட் அணியாமல் வாகனம் ஓட்டுவதே. ஹெல்மட் அணியாததால் ஏற்படும் உயிரிழப்பில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.

ஹெல்மெட் அணியாமல் செல்வதால் ஏற்படும் விபத்தின்போது, ஒரு நாளைக்கு 98 பேர் உயிரிழந்து வருகின்றனர் என்றும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் ஹெல்மெட்டு கட்டாயம் அணிய வேண்டும்.

தமிழகத்தில் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் மற்றும் பின் இருக்கையில் இருப்பவரும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றமும் உத்தரவிட்டு அதை கடுமையாக கண்காணிக்க வேண்டும் என காவல்துறைக்கும் உத்தரவிட்டுள்ளது.

கடந்தாண்டு இருசக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்றதால் உயிரிழப்பு ஏற்பட்டதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியானது. இதனால் ஹெல்மட் அணிய வேண்டும் என்கிற விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும், அதையும் சட்டப்பூர்வமாக நடைமுறைப்படுத்தவேண்டும் என உயர் நீதிமன்றமே உத்தரவிட்டது.

இந்நிலையில் ஹெல்மட் அணிவது கட்டாயமாக்கப்பட்டது, ஆனாலும் குறைந்த அளவிலான சதவிகிதத்தினர் ஹெல்மட் அணியாமல் செல்வது வாடிக்கையாக உள்ளது. அதிலும் கரோனா ஊரடங்குக்குப்பின் ஹெல்மட் அணியாமல் செல்வது அதிகமாகியுள்ளது.

இந்நிலையில் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் கண்ணன் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னையில் உள்ள பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல் போட வரும் இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மட் அணியாமல் வந்தால் பெட்ரோல் போடவேண்டாம் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவை கடுமையாக கடைபிடிக்கவும், NO HELMET NO PETROL என்கிற போர்டை வைக்கவும் உத்தரவிட்டு அதை கடைபிடிக்கிறார்களா என்பதை கண்காணித்து அனைத்து பெட்ரோல் பங்குகளுக்கும் கடைப்பிடிக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி இனி சென்னையில் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல் போட ஹெல்மட் அணியாமல் சென்றால் பெட்ரோல் போட முடியாது. இது ஹெல்மட் அணிய வேண்டியதன் அவசியத்தை உணர்த்த எடுக்கப்படும் நடவடிக்கை ஆகும்.

SCROLL FOR NEXT