குமரியில் தடையை மீறி நாகர்கோவில், மேல்புறத்தில் காங்கிரஸார் ஏர், கலப்பைப் போராட்டம் நடத்தினர். இதில் 3 எம்.எல்.ஏ.க்கள் உட்பட 380 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் வேளாண் சட்டத்தைக் கண்டித்தும், இதை ரத்து செய்ய வலியுறுத்தியும் தமிழகத்தில் காங்கிரஸார் ஏர் கலப்பை போராட்டம் நடத்தி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று நாகர்கோவில், மேல்புறம் ஆகிய இடங்களில் காங்கிரஸார் ஏர் கலப்பைப் பேரணி நடத்தினர்.
குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் நாகர்கோவில் வேப்பமூட்டில் காமராஜர் சிலை முன்பு இருந்து மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏர் கலப்பையை ஏந்தியவாறு கோஷமிட்டபடி போராட்டம் நடத்திய காங்கிரஸார் அங்கிருந்து பேரணியாகச் செல்ல முயன்றனர்.
இப்போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பிரின்ஸ், விஜயதரணி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் விஜய் வசந்த், மாநகர தலைவர் அலெக்ஸ், மகளிர் காங்கிரஸ் மாவட்ட தலைவி அருள் சபிதா உட்பட காங்கிரஸார் 127 பேரை போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதைபோல் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் மேல்புறம் சந்திப்பில் இந்திராகாந்தி சிலை முன்பு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. தலைமையில் காங்கிரஸார் ஏர் கலப்பை போராட்டம் நடத்தினர்.
பின்னர் அங்கிருந்து கழுவன்திட்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்றபோது போலீஸார் அவர்களை கைது செய்தனர்.
இப்போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், விஜயதரணி உட்பட 253 பேரை போலீஸார் கைது செய்தனர். மாவட்டம் முழுவதும் நேற்று ஏர் கலப்பை போராட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸார் 380 பேர் கைது செய்யப்பட்டனர்.