கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையில் மாவட்ட ஆட்சியர்கள், நிபுணர்குழுவின் வழிகாட்டுதல் காரணமாக நோய்த்தொற்று பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுத் தடுப்பில் இந்தியாவிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளதாக முதல்வர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நவ. 30 அன்று ஊரடங்கு முடிவடைவதை அடுத்து மாவட்ட ஆட்சியர்கள், மருத்துவ நிபுணர்களுடனான ஆலோசனைக்கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கியது.
இந்தக் கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
“நிவர் புயல் தமிழகத்தில் ஏற்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக என் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் துணை முதலவர் ஓபிஎஸ், அமைச்சர்கள், டிஜிபி பல்துறை சார்ந்த அதிகாரிகள் கலந்துகொண்டனர். அந்த ஆலோசனைக் கூட்டத்தில் புயல் ஏற்படும்போது எவ்வாறு நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அறிவுரை கூறப்பட்டது.
அதன் அடிப்படையில் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக எவ்வித உயிர் சேதமோ, உடமைச் சேதமோ பெரிய அளவில் இல்லை.
சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுத்ததால் எவ்வித சேதாரமும் இல்லாமல் தப்பியது. தாழ்வான பகுதிகளில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தி அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் வசதிகள் செய்துகொடுக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட இடங்களை நானும், துணை முதல்வரும், உள்ளாட்சித்துறை அமைச்சரும், அமைச்சர்களும் நேரில் சென்று பார்த்தோம். மீட்புப் பணியில் உதவிய அனைவருக்கும் நன்றி.
தமிழகத்தில் புயல் தாக்குவதை அறிந்தவுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடர்புக்கொண்டு தேவையான உதவிகள் செய்வதாக அறிவித்தார், தேவையான குழுக்களையும் அனுப்பி வைத்தார்.
பிரதமரும் நேற்றிரவு தொடர்புகொண்டு தேவையான உதவிகளை அளிப்பதாக தெரிவித்தார். புயல் கரையைக் கடந்தப்பின் ஆந்திராவை நோக்கிச் சென்றது. இதன் காரணமாக வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை பெய்தது. ஆந்திராவில் பெய்த கனமழை காரணமாக அங்கு நீர் நிரம்பி அங்கிருந்து வரும் புன்னையாறு, பாலாறு, மகாநதி வழியாக நீர் வரத்து வந்துக் கொண்டிருக்கிறது அதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுத்து வருகிறார்.
சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது. அதை உரிய முறையில் நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கரோனா வைரஸ் தடுப்புப் பணி குறித்தும், கடந்த முறை என் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. ஒவ்வொரு மாதமும் இப்படி ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு மருத்து நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையை ஏற்று அதை நாம் கடைபிடித்ததன் விளைவாக கரோனா பெரிய அளவில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
மருத்துவக்குழு, மருத்துவ நிபுணர்கள் குழு வழங்கிய ஆலோசனை பெரிதும் உதவிகரமாக இருந்தது. தலைமைச் செயலாளர் தலைமையில் 13 முறை மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதன் மூலம் நோய்ப்பரவல் தடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் சொல்கின்ற தகவல்களை அரசு கவனமாக பரிசீலித்து அதன் அடிப்படையில் மாவட்டந்தோறும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. கரோனா சிகிச்சைக்காக ரூ.7525.7 கோடி செலவழித்துள்ளோம்.
பாதிக்கப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர், கிருமி நாசினி தெளிப்பு, கரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. வல்லுனர், நிபுணர் குழு வழிகாட்டுதல் படி கிட்னி அறுவை சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, நீண்டகால நீரிழிவு நோய் போன்ற இணைய நோய் உள்ளோர், முதியோர், கர்ப்பிணிகள் போன்றோருக்கு நோய் தொற்று வராமல் களப்பணியாளர்கள் மூலம் கண்காணிக்கப்பட்டது.
களப்பணியாளர்கள் மூலம் வீடு வீட்டாக சென்று கண்காணிக்கப்பட்டு அவர்களை கண்டறிந்து எச்சரித்தும், நோயுள்ளவர்களை மருத்துவ சிகிச்சைக்கு அனுப்பி வைத்தும் நடவடிக்கை எடுத்தனர். 5 லட்சத்து 22 ஆயிரத்து 530 காய்ச்சல் முகாம்கள் மூலம் 2,79,39140 பேர் பயனடைந்தனர். 11,46,363 பேர் முகாம்களில் கலந்துக் கொண்டனர். இதன் மூலம் நோய் தொற்று இருப்பவர்களை கண்டறிய முடிந்தது.
இணைய நோய் உள்ளவர்கள் குறித்த விழிப்புணர்வு செய்தியை நோட்டீஸ் போட்டு வீடுவீடாக கொண்டுச் சேர்த்தோம். பிசிஆர் பரிசோதனை அதிகப்பட்சமாக 95000 பேருக்கு செய்யப்பட்டது. பிசிஆர் பரிசோதனை மூலம் நோய்த்தொற்று பரிசோதனை நடத்தி கண்டறிந்து சிகிச்சை அளித்த நடவடிக்கையில் 76% அரசு பரிசோதனை மையங்களில் செய்யப்பட்டது. மற்ற மாநிலங்களில் பரிசோதனை குறைக்கப்பட்டாலும் தமிழகத்தில் குறையாமல் பரிசோதனை செய்யப்படுகிறது.
நோய்ப்பரவல் காலத்தில் வீடுவீடாக உணவுப்பொருட்கள் வழங்கப்பட்டது. 1,41,527 படுக்கைகள் அதில் ஐசியூ வசதி கொண்டவை 7097, வென்டிலேட்டர் 6000 க்கும் மேற்பட்டவை என சிகிச்சை அளிக்கப்பட்டது. 15000 மருத்துவபணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் என இந்த காலக்கட்டத்தில் புதிதாக பணிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.
களப்பணியில் உள்ள பணியாளர்களுக்கும், கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள மக்களுக்கும் தடுப்பு மாத்திரைகள் வழங்கப்பட்டது. 2000 மினி கிளினிக்குகள் டிச.15-ம் தேதி முதல் தொடங்கப்படும். மருத்துவர், செவிலியர், உதவியாளருடன் செயல்படும்.
கோயம்பேடு காய்கறி அங்காடி திருமழிசைக்கு மாற்றப்பட்டு நோய்ப்பரவல் குறைந்தவுடன் மீண்டும் கோயம்பேட்டுக்கு மாற்றப்பட்டது. பிரதமர் தமிழகத்தில் நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்டது குறித்து கேட்டறிந்தார். நாம் எடுத்த நடவடிக்கையை அடுத்து பிரதமர் நமது மாநிலம் சிறப்பாக செயல்பட்டதை பாராட்டினார்.
பண்டிகை காலத்தில் பொதுமக்கள் தவறாமல் முகக்கவசம் அணிதல் வேண்டும். அரசு அறிவித்த நடைமுறைகள் பின்பற்றாதவர் மீது அபராதம் விதித்தல், திருமணம், பொது நிகழ்ச்சி, மதவழிப்பாட்டுத்தளங்கள், வெளியில் பொருட்கள் வாங்கச் செல்லும்போது கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.
நாம் எடுத்த நடவடிக்கை காரணமாக நோய்ப்பரவல் கட்டுப்படுத்தப்பட்டது. பொதுமக்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு நடைமுறைகளை சரியாக கடைபிடித்தால் தான் நோய்த்தொற்று பரவாமல் காக்க முடியும். நோய்ப்பரவல் தடுக்கப்பட்டு குறைக்கப்பட்டிருந்தாலும் இன்னும் இயல்பு நிலை திரும்ப சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. இதுவரை நோய்த்தொற்றுக்கு ஆளானவர்கள் எண்ணிக்கை 7,77,616 , குணடைந்தவர்கள் எண்ணிக்கை 7,54,826, சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 11,109, இற்ப்பு விகிதம் 1.5%.
அரசு, தனியார் மருத்துவமனையில் கோவிட் நோய் சிகிச்சை அரசு அறிவித்த நடைமுறைகளை தவறாக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உணவுப்பொருள் வழங்கல் துறை மூலம் வழங்கப்பட்டது. 14 நலவாரியங்களில் பதிவு செய்யப்பட்ட 35.6 லட்சம் தொழிலாளிகளுக்கும், 13.3 லட்சம் மாற்றுத்திறனாளிகளுக்கும் நிவாரணத்தொகை அளிக்கப்பட்டது.
கரோனா வைரஸ் காலத்தில் அம்மா 8 லட்சம் பேருக்கு நாளொன்றுக்கு உணவு அளித்தோம். அதற்காக அம்மா உணவகத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி, அதேப்போன்று சமூக உணவுக்கூடங்கள் மூலமாகவும் உணவு தயாரித்து வழங்கினோம். நடமாடும் அம்மா உணவகம் ஏற்படுத்தப்பட்டு 3 வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று சோதனையான காலக்கட்டத்திலும் தொழில் முதலீட்டு மாநாடு மூலம் 40,718 கோடி ரூபாய்க்கு தொழில் முதலீட்டை ஈர்த்துள்ளோம். சிறுகுறு நிறுவனங்களுக்கு தொழில் கடன் அளித்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி. 3 லட்சம் சுய உதவிக்குழுக்களுக்கு இந்த காலக்கட்டத்தில் ரூ.11,620 கோடி வங்கிக்கடன் அளிக்கப்பட்டது.
கரோனா பேரிடரை சமாளிக்க அரசு கூறும் வழிகாட்டுதல்களை பொதுமக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்”.
இவ்வாறு முதல்வர் பேசினார்.