தமிழகம்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிதாக 150 வகை பட்டாசுகள் விற்பனைக்கு வருகை: தீவுத் திடலில் நாளை சில்லறை கடைகளை தொடங்க திட்டம்

ச.கார்த்திகேயன்

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டு புதிதாக 150 வகை பட்டாசுகள் வந்துள்ளன. சென்னை தீவுத் திடலில் வரும் 30ம் தேதி (நாளை) முதல் பட்டாசு சில்லறை விற்பனை கடைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு இன்னும் 12 நாட்கள் உள்ள நிலையில் சென்னை பாரீஸ் ஆன்டர்சன் தெரு, பந்தர் தெரு ஆகியவற்றில் உள்ள பட்டாசு மொத்த விற்பனையகங்கள் தற்போது பரபரப்பாக இயங்கி வருகின்றன. இந்த ஆண்டு 500 வகை பட்டாசு ரகங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. இதில் 150 ரகங்கள் புது வரவாக உள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு 12 சதவீதம் வரை பட்டாசுகளின் விலை உயர்ந்துள்ளன. சில்லறை விலையில் பட்டாசு விற்பனைக்காக தீவுத் திடல், அண்ணாநகர், கோயம்பேடு பஸ் நிலையம் அருகில் என 3 இடங்களிலும் விற்பனை அரங்குகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

பட்டாசு விற்பனை குறித்து ஆன்டர்சன் சாலையில் உள்ள பட்டாசு கடையைச் சேர்ந்த கே.முகமது கூறியதாவது:

பட்டாசு விற்பனை தற்போதுதான் சூடு பிடித்துள்ளது. இந்த ஆண்டு சுமார் 100 வகையான வான வேடிக்கை நிகழ்த்தும் பட்டாசுகள் புதிதாக வந்துள்ளன. பனோரமா என்ற பட்டாசு தொடர்ந்து 500 முறை வானில் சென்று வெடித்து, வெவ்வேறு வண்ணங்களை கொடுக்கும். மேலும் புல்லட் புறப்படுவது போன்ற ஒலியெழுப்பியவாறு வானில் சென்று வெடிக்கும் ‘புல்லட் டிரெயின்’ பட்டாசு, குருவி கத்துவது போன்ற ஒலியெழுப்பும் ‘சிங்கிங் பேர்டு’ பட்டாசு உள்ளிட்ட 150 ரகங்கள் புது வரவாக வந்துள்ளன.

குழந்தைகளுக்கென, கையில் நெருப்பு படாத வகையிலான நீண்ட குச்சியை கொண்ட மத்தாப்பு, 5 வண்ணங்களில் எரியும் மத்தாப்பு, வெவ்வேறு வண்ணங்களில் அணைந்து, அணைந்து எரியும் ‘டிஸ்கோ பிளாஷ்’ பட்டாசு, மினி பூந்தோட்டி ஆகியவை புது வரவாக வந்துள்ளன.

இந்த ஆண்டு வெடிகள் அடங்கிய பெட்டி ரகத்துக்கேற்ப ரூ.13 முதல் ரூ.310 வரையும், ராக்கெட்டுகள் ரூ.63 முதல் ரூ.500 வரையும், பூந்தொட்டிகள் ரூ.55 முதல் ரூ.405 வரையும் விற்பனை செய்யப்படுகின்றன. 16 வகை பட்டாசுகள் அடங்கிய பரிசு பெட்டி ரூ.420-க்கும், 21 ரகங்கள் கொண்டது ரூ.650-க்கும், 28 ரகங்கள் கொண்டது ரூ.730-க்கும், 31 ரகங்கள் கொண்டது ரூ.900-க்கும், 50 ரகங்கள் கொண்டது ரூ.3250-க்கும் விற்பனை செய்யப் படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை மாவட்ட தீயணைப்பு துறை உதவி அலுவலர் பு.கிருஷ்ணமூர்த்தி கூறும்போது, “பட்டாசு சில்லறை விற்பனை கடைகளை தொடங்குவது தொடர்பாக தீவுத் திடலில் நேற்று ஆய்வு மேற்கொண்டோம். முன்பு 15 கடைகளுக்கு ஒரு மின் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டிருந்தது. இந்த ஆண்டு மாஸ்டர் கண்ட்ரோல் ரூம் ஒன்றை அமைத்திருக்கிறோம். இதன் மூலம் எங்கேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால், ஒரே இடத்தில் அனைத்து கடைகளுக்குமான மின்சார விநியோகத்தை நிறுத்த முடியும்” என்றார்.

சென்னை தீவுத் திடல் வியாபாரிகள் சங்க காப்பாளர் டி.புனிதன் கூறும்போது, “தீவுத் திடலில் விற்பனை அரங்குகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. சிறப்பு விற்பனையை 30-ம் தேதி தொடங்க திட்டமிட்டிருக்கிறோம்” என்றார்.

SCROLL FOR NEXT