உலகநாதன். 
தமிழகம்

மின் கம்பியில் நடந்து சென்று மரங்களை அகற்றிய ஊழியர்

செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே பந்தநல்லூர் பகுதியில் ‘நிவர்’ புயலின் காரணமாக பல இடங்களில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்ததால் மரங்கள் சாய்ந்தன. இதில் திருமாந்துறையில் உள்ள உயர் அழுத்த மின்கம்பிகளில் மூங்கில் மரங்கள் சாய்ந்ததால் மின்விநியோகம் பாதிக்கப்பட்டு, அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வந்தனர். மூங்கில் மரங்கள் ஒன்றோடு ஒன்று சாய்ந்திருந்ததால், கீழே இருந்தபடி அவற்றை வெட்டி அகற்ற முடியாமல் மின்வாரியத்தினர் பெரும் சிரமப்பட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கதிராமங்கலம் மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றும் சூரியனார்கோவில் கிராமத்தைச் சேர்ந்த கள உதவியாளர் எஸ்.உலகநாதன்(44) என்பவர், நேற்று முன்தினம் திருமாந்துறைக்கு வந்தார். மின்கம்பத்தில் ஏறிய அவர், உயர் அழுத்த மின்கம்பியில் 80 அடி தொலைவுக்கு நடந்து சென்று, மின்கம்பிகளில் ஒன்றோடு ஒன்று சிக்கியிருந்த மூங்கில் மரங்களை அரை மணி நேரம் போராடி வெட்டி அகற்றினார்.

இதையடுத்து, கீழே இருந்த மின்வாரிய பணியாளர்கள் மூங்கில் மரங்களை வெட்டி அகற்றினர். பின்னர் உலகநாதன் மீண்டும் மின் கம்பியிலேயே நடந்துவந்து கீழே இறங்கினார். புயல் மீட்புப் பணியில் இவரது செயலை கிராம மக்கள் வெகுவாக பாராட்டினர்.

உலகநாதன், மின்கம்பியில் நடந்து செல்வதை செல்போனில் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் சிலர் வெளியிட்டனர். அக் காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

இதுகுறித்து உலகநாதன் கூறியதாவது: 22 ஆண்டுகளுக்கு முன் மின்வாரியத்தில் தற்காலிகமாக பணியில் சேர்ந்த நான், தற்போது நிரந்தர பணியாளராகி வேலை செய்து வருகிறேன். புயல் காற்றால் மின்கம்பிகளில் மூங்கில் மரங்கள் ஒன்றோடு மற்றொன்று சிக்கியிருந்ததால் இப்பகுதியில் மின்சாரம் விநியோகம் தடைபட்டது. இதையடுத்து, அங்கு மீட்பு பணியில் இருந்தவர்களுடன் சேர்ந்து மூங்கில் மரங்களை அகற்றினேன் என்றார்.

இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த மோகன் என்பவர் கூறியதாவது: மின்கம்பிகளில் மூங்கில் மரங்கள் சிக்கியிருந்ததால் திருமாந்துறை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய பணியாளர்கள்மூங்கில் மரங்களை அகற்ற சிரமப்பட்டனர். அப்போது, அங்கு வந்த உலகநாதன் தலைக்கவசம் அணிந்துகொண்டு கிடுகிடுவென மின்கம்பத்தில் ஏறி கம்பியில் நடந்து சென்று மரங்களை வெட்டி அகற்றினார். இவரது பணி மிகவும் பாராட்டுக்குரியது என்றார்.

SCROLL FOR NEXT