தமிழகம்

தி.மலை அண்ணாமலை உச்சியில் நாளை மகா தீபம்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை

செய்திப்பிரிவு

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக, திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகைத் தீபத் திருவிழா மிக எளிமையாக நடைபெற்று வருகிறது.

தீபத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, அண்ணாமலையார் கோயிலில் நாளை (29-ம் தேதி) அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், 2,668 அடி உயரம் உள்ள அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபமும் ஏற்றப்படவுள்ளது. 11 நாட்களுக்கு மகா தீபம் ஏற்றப்படும்.

மகா தீபம் ஏற்றப்படுவதற்கு முன்னதாக, தீப தரிசன மண்டபத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருள, தங்கக் கொடி மரம் முன்பு ஆணும் பெணும் சமம் என்ற தத்துவத்தை உலகுக்கு எடுத்துரைக்கும் விதமாக, சிறப்பு அலங்காரத்தில் அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.

பின்னர், கோயிலில் உள்ள பிரம்மத் தீர்த்ததில் 3 நாள் தெப்ப உற்சவம் 30-ம் தேதி தொடங்குகிறது. டிசம்பர் 3-ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் மகா தீபத் திருவிழா நிறைவு பெறுகிறது.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால், அண்ணாமலையார் கோயிலில் நாளை (29-ம் தேதி) தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், மலை உச்சிக்கு சென்று மகா தீபத்தை தரிசனம் செய்யவும் அனுமதி கிடையாது. மேலும், தீபத் திருநாள் மற்றும் பவுர்ணமியன்று, கிரிவலம் செல்லவும் பக்தர்களுக்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. வெளியூர்களில் இருந்து திருவண்ணாமலை நகருக்குள் இன்று, நாளை (28, 29-ம் தேதி ) வருவதற்கு பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. பாதுகாப்புப் பணியில் 2 ஆயிரம் காவல் துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பக்தர்களை தடுத்து நிறுத்ததும் வகையில், நகரைச் சுற்றி புறவழிச்சாலையில் 15 இடங்களில் காவல் துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

SCROLL FOR NEXT