நீலகிரி மலை ரயிலின் 107-வது ஆண்டு விழா, உதகை ரயில் நிலையத்தில் நேற்று கொண்டாடப்பட்டது.
நாட்டிலேயே பல் சக்கரம் கொண்டது நீலகிரி மலை ரயில் பாதை. இந்தப் பாதை மேட்டுப் பாளையத்தில் இருந்து குன்னூர் வரை அமைக் கப்பட்டு, 1908-ம் ஆண்டு உதகை வரை விரிவுபடுத்தப்பட்டது. நூற்றாண்டை கடந்த மலை ரயிலுக்கு, 2005-ம் ஆண்டு ‘யுனெஸ்கோ’ நிறுவனத்தின் பாரம்பரிய அந்தஸ்து வழங்கப் பட்டது.
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், மேட்டுப்பாளை யத்தில் இருந்து குன்னூர் வரை இயக்கப்படும் நீராவி இன்ஜின் பொருத்தப்பட்ட மலை ரயிலில் பயணிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இந்நிலையில், உதகை ரயில் நிலையத்துக்கு நேற்று மலை ரயில் வந்தவுடன் சுற்றுலா பயணிகளுக்கு பூக்கள், இனிப்புகள் வழங்கப்பட்டன. பாரம்பரிய மலை ரயில் அறக்கட்டளை சார்பில் நடந்த விழாவில் பங்கேற்று மாவட்ட ஆட்சியர் பொ.சங்கர், இந்திய அணுசக்திக் கழக முன்னாள் தலைவர் சீனிவாசன் ஆகியோர் கேக் வெட்டினர்.
பாரம்பரிய மலை ரயில் அமைப்பு நிர்வாகி நடராஜ், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.