உயர் நீதிமன்ற மதுரைக் கிளை: கோப்புப்படம் 
தமிழகம்

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கோரி வழக்கு; மத்திய, மாநில அரசுக்கு நோட்டீஸ்

கி.மகாராஜன்

மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க மாவட்டம் தோறும் சிறப்பு நீதிமன்றம் அமைக்கக்கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை மாகாளிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிபாரதி, உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:

"2016-ம் ஆண்டின் மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆனால், அதன்படி சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படவில்லை. எனவே, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாற்றுத்திறனாளிகள் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கவும், சிறப்பு நீதிமன்றத்துக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தவும், சிறப்பு அரசு வழக்கறிஞர்கள் நியமிக்கவும், மாற்றுத்திறனாளிகள் உரிமை சட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தவும் உத்தரவிட வேண்டும்".

இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வில் இன்று (நவ. 27) விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிட்டார். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

SCROLL FOR NEXT