சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் டிச.4-ம் தேதி நடக்க உள்ள நிலையில் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் இருப்பதால் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது.
சிவகங்கை மாவட்டத்தில் மொத்தமுள்ள 16 மாவட்ட ஊராட்சி வார்டுகளில், அதிமுக 8 இடங்களிலும், திமுக கூட்டணியில் திமுக 5, காங்கிரஸ் 2, இந்திய ஜனநாயக கட்சி ஒரு இடத்தில் வென்றன. இதனால் அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் உள்ளன.
இந்நிலையில், ஜன.11, ஜன.30, மார்ச் 4 ஆகிய தேதிகளிலும் அறிவிக்கப்பட்ட மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தலை அதிமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து புறக்கணித்தனர். இதனால் பெரும்பான்மை இல்லாததால் மூன்று முறையும் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டது.
மேலும், பெரும்பான்மையை காரணம் காட்டி ஒரு தேர்தலை மூன்று முறை மட்டுமே தள்ளி வைக்க முடியும். நான்காவது முறையாக பெரும்பான்மைக்குக் குறைவான கவுன்சிலர்கள் வந்தாலும், அவர்கள் மூலம் தேர்தல் நடத்த வேண்டும். அதில், பெரும்பான்மை வாக்கு பெறுவோர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவர். போட்டியிடுவோர் சம வாக்குகள் பெற்றால் குலுக்கல் முறையில் தலைவர், துணைத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுவர்.
ஆனால், கரோனாவால் 6 மாதங்களாக தேர்தல் அறிவிக்கவில்லை. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவடைந்து 8 மாதங்களாகியும், சிவகங்கை மாவட்டத் தலைவர், துணைத் தலைவர் தேர்வாகாததால், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் செயல்பட முடியாத நிலை உள்ளது.
அதிருப்தி அடைந்த மாவட்ட கவுன்சிலர்கள் சிலர் தேர்தலை நடத்த வலியுறுத்தி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின்போது இருவாரத்திற்குள் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்தது. இந்நிலையில், டிச.4-ம் தேதி சிவகங்கை மாவட்ட ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர் தேர்தல் நடத்தப்படும் என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
அதிமுக, திமுக கூட்டணி சமபலத்தில் இருப்பதால், தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதனால் இந்த முறையாவது தேர்தல் நடக்குமா என்ற எதிர்பார்ப்பு சிவகங்கை மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது.