எந்தப் புயலுக்கும் நேரில் செல்லாத முதல்வர் பழனிசாமி, தேர்தல் வருவதால் கடலூருக்குச் சென்றுள்ளார் என்று திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட திடீர் நகர் பகுதியில் நேற்று முன்தினம் சூழ்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் படகுகள் மூலம் மீட்கப்பட்டு கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களை திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் இன்று (நவ. 27) நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததுடன் நிவாரண உதவிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, "மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தமிழகம் வந்தபோது பெரிதாகச் சாதித்து விடுவதுபோல் பேசிவிட்டுச் சென்றார். தற்போது, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கோரி தமிழக அரசு அவரிடமே போதுமான நிதியைக் கேட்டுப் பெறட்டும். மத்திய அரசு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.
தமிழக முதல்வர் பழனிசாமி எந்தப் புயலுக்கும் வெளியே செல்லாதவர். தேர்தல் நேரம் என்பதால் கடலூருக்குச் சென்றார். வேலூர் மாவட்டத்தில் மோர்தனா அணையிலிருந்து வெளியேறக்கூடிய தண்ணீர் 10 ஏரிகளுக்குச் செல்லக்கூடிய கால்வாயைத் தூர்வாரச் சொல்லி, திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆனால், மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கையை மேற்கொள்ளாததால் தண்ணீர் தற்போது வீணாக பாலாற்றில் கலந்து கடலுக்குச் செல்கிறது. இதே நிலைதான் தமிழகத்தில் உள்ளது.
குடிமராமத்து என்ற பெயரில் நீர்நிலைகளைத் தூர்வாரிவிட்டோம் என்று பொய்க் கணக்குக் காட்டியதன் விளைவு வேலூர் வெள்ளக்காடாகக் காட்சியளிக்கிறது. நிரம்பிய நீர்நிலைகள் அதன் முழுக் கொள்ளளவை எட்டவில்லை. காரணம், நீர்நிலைகள் சரியாகத் தூர்வாரப்படாததுதான். புயலால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்களைக் கணக்கிட்டு மத்திய அரசுக்கு அனுப்பி உரிய நிதியைப் பெற வேண்டும்" என்று துரைமுருகன் தெரிவித்தார்.
அப்போது, அணைக்கட்டு திமுக எம்எல்ஏ நந்தகுமார், வேலூர் திமுக எம்எல்ஏ கார்த்திகேயன், முன்னாள் அமைச்சர் வி.எஸ்.விஜய் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.